சுக்கிரீவன் கிட்கிந்தைக்கு அழைத்தலும் இராமன் மறுத்தலும்

4132. ''குரங்கு உறை இருக்கை'' என்னும்
      குற்றமே குற்றம் அல்லால்,
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு
      அரசு எனல் ஆகும் அன்றே,
மரம் கிளர் அருவிக் குன்றம்;
      வள்ளல்! நீ, மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய,
      இருத்தியால், சில நாள், எம்பால்.

     வள்ளல் - வண்மைக் குணம் உடையவனே! மரம்கிளர் அருவிக்
குன்றம் -
மரங்கள் விளங்குகின்ற அருவிகளை உடைய கிட்கிந்தை மலை;
குரங்கு உறை இருக்கை -
குரங்குகள் வாழ்கின்ற இடம்; என்னும் குற்றமே
குற்றம் அல்லால் -
என்று கூறப்படும் ஒரு குற்றத்தை உடையதே அல்லாமல்;
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு -
(பிற சிறப்புக்களால்)

சபைகள் பொருந்திய தேவர் உலகத்துக்கே; அரசு எனல் ஆகும்
அன்றே -
தலைமை கொண்டு மேம்பட்டதென்று கூறத்தக்க  தல்லவா? நீ -
(அதனால்) நீ; மனத்தின் எம்மை இரங்கிய பணி - உன் மனத்தில் எங்கள்
பால் இரக்கங் கொண்டு கட்டளையிடும் வேலைகளை; யாம் செய்ய -
நாங்கள் செய்ய; சில நாள் எம்பால் இருத்தி - சில நாட்கள் எம்முடன்
இருப்பாயாக.

     அரங்கு - சுதர்மை முதலிய தெய்வ சபைகள்.  நில, நீர்வளம் பெற்று
வாழ்வதற்கு உரிய வசதிகள் கொண்ட இடமாதலின் 'மரம்கிளர் அருவிக்
குன்றம்' எனப்பட்டது.  வள்ளல் - அண்மை விளி; இழந்த மனைவியையும்
அரசினையும் தனக்கு அளித்தது கருதிக் கூறியது. கிட்கிந்தையைக் குரங்குகள்
வாழும் இடம் என ஒரு குறை கூறலாமேயன்றி அது சுவர்க்கத்தினும்
மேம்பட்டது என்பதால் இராமனை அவ்விடம் தங்குமாறு சுக்கிரீவன்
வேண்டினான் என்க.                                            18