4133.'அரிந்தம! நின்னை அண்மி,
     அருளுக்கும் உரியேம் ஆகி,
பிரிந்து, வேறு எய்தும் செல்வம்
      வெறுமையின் பிறிது அன்றாமால்;
கருந் தடங் கண்ணினாளை
      நாடல் ஆம் காலம்காறும்
இருந்து, அருள் தருதி, எம்மோடு'
      என்று, அடி இணையின் வீழ்ந்தான்.

     அரிந்தம - பகைவர்களை அழிப்பவனே! நின்னை அண்மி -
(நாங்கள்) உன்னைப் புகலடைந்து; அருளுக்கும் உரியேம் ஆகி - (உனது)
கருணைக்கும் உரியவர்களாயிருந்து; பிரிந்து - (பின்) உன்னை விட்டுப்
பிரிந்து; வேறு எய்தும் செல்வம் - தனியே அனுபவிக்கின்ற செல்வம்;
வெறுமையின் பிறிது அன்று ஆம் -
வறுமையினும் வேறான தன்று;
கருந்தடங் கண்ணினாளை -
(ஆதலால்) கரிய பெரிய கண்களை உடைய
பிராட்டியை; நாடல் ஆம் காலம் காறும் - தேடுதற்கு ஏற்ற காலம்
வருமளவும்; எம்மோடு இருந்து அருள் தருதி - (கிட்கிந்தையில்)
எங்களோடு இருந்து அருள்புரிவாய்; என்று - என்று கூறி; அடி இணையின்
வீழ்ந்தான்
- இராமனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

     வாலியைக் கொன்ற திறம் பற்றி 'அரிந்தம' என அழைத்தான்.
இராமனைச் சேர்ந்து பெறும் இன்பத்தை நோக்க, தனியே வேறாகப் பெறும்
செல்வம் பெற்றும் பெறாதது போலாகும் என்றான்.                    19