4134. | ஏந்தலும், இதனைக் கேளா, இன் இள முறுவல் நாற, 'வேந்து அமை இருக்கை, எம்போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா; போந்து அவண் இருப்பின், எம்மைப் போற்றவே பொழுது போமால்; தேர்ந்து, இனிது இயற்றும் உன்தன் அரசியல் தருமம் தீர்தி. |
ஏந்தலும் - பெருமையில் சிறந்த இராமனும்; இதனைக் கேளா - (சுக்கிரீவன் கூறிய) இவ்வுரையைக் கேட்டு; இன்இள முறுவல் நாற - இனிய புன்னகை தோன்ற; வேந்து அமை இருக்கை - அரசர்க்குரிய அரண்மனையில் தங்கியிருக்கும்; எம்போல் விரதியர் - எம்மைப் போல் விரதம் பூண்டோர்; விழைதற்கு ஒவ்வா - விரும்பியிருத்தற்குத் தகாததாகும்; அவண் போந்து இருப்பின் - (மேலும்) அவ்விடத்தில் (கிட்கிந்தா நகரத்தினுள்) வந்து வசித்தால்; எம்மைப் போற்றவே பொழுது போம் - எம்மை உபசரிப்பதிலேயே (உனக்குப்) பொழுது கழிந்திடும்; தேர்ந்து இனிது இயற்றும் - ஆராய்ந்து இனிது நடத்தும்; உன்தன் அர சியல் தருமம் - உன் அரசாட்சியின் முறைமையினின்றும்; தீர்தி - தவறியவனாவாய். விரதியர் - தவ வாழ்வினர். 'தாழிரும் சடைகள் தாங்கித் தாங்க அரும் தவம் மேற்கொண்டு' கானகத்தில் வாழவேண்டும் என்பது கைகேயி சொன்ன (1601); அது பழுதாகாமல் தவ வாழ்வினராக இருந்தனர் இராமனும் இளவலும். முறுவல் - அன்பு பற்றி எழுந்தது. கேளா - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் உடன்பாட்டுப் பொருளில் வந்தது. நாற - தோன்ற; 20 |