4135. | 'ஏழ் - இரண்டு ஆண்டு, யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்; வாழியாய்! அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்; பாழி அம் தடந் தோள் வீர! பார்த்திலைபோலும் அன்றே! யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறும் இன்பம் என்னோ? |
வாழியாய் - வாழ்வை உடையவனே!ஏழ் இரண்டு ஆண்டு - பதினான்கு வருட காலம்; யான் போந்து எரி வனத்து இருக்க - நான் சென்று வெம்மை மிக்க காட்டில் வசிப்பதாக; ஏன்றேன் - ஏற்றுக் கொண்டேன்; அரசர் வைகும் வளநகர் - அரசர்கள் வாழும் செல்வ வளம் வாய்ந்த நகரில்; வைகல் ஒல்லேன் - தங்குவதற்கு உடன்படேன். பாழி அம் தடந்தோள் வீர - (மேலும்) வலிமை வாய்ந்த அழகிய பெரிய புயங்களை உடைய வீரனே!யாழ் இசை மொழியோடு அன்றி - யாழின் இசைபோலும் சொல்லையுடைய சீதையோடு அல்லாமல்; யான் உறும் இன்பம் என்னோ - நான் அடையும் இன்பம் யாதோ? பார்த்திலை போலும் - (நீ இதனை) எண்ணிப் பார்த்தாய் இல்லை போலும்! வாலி இறந்தபிறகு, கிட்கிந்தைக்கு வந்து சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும் என வேண்டியவன் அனுமன் என்கிறது வான்மீகம்; சுக்கிரீவன் அழைப்பதாக அங்குச் செய்தி இல்லை. தந்தை கட்டளையின்படி பதினான்கு ஆண்டுகள் காட்டில் உறைதல் வேண்டும், நகரினுள்ளாவது ஊரினுள்ளாவது புகுதல் தகாது எனக் கூறி சுக்கிரீவன் வேண்டுகோளை மறுக்கிறான், இராமன். எரிவனம் - வெயிலின் கடுமையால் தீப்போல் சுடுகின்ற காடு. சீதையின் சொல்லுக்கு யாழ் உவமை. 'குறி நரம்பு எறிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே' (2073); 'குழலும் யாழும், கொழும்பாகும் அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழி' (3569) என்பன காண்க. இராமனுக்குச் சீதையோடன்றித் தனியே எய்தும் இன்பம் இன்பமாகாது. அன்று ஏ - அசை நிலைகள். 21 |