4137. | 'இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும், போரின் வில் அறம் துறந்தும், வாழ்வேற்கு, இன்னன மேன்மை இல்லாச் சில் அறம்; புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு, நல் அறம் தொடர்ந்த நோன்பின், நவை அற நோற்பல் நாளும். |
இல்லறம் துறந்திலாதோர் - மனை அறத்திற்கு உரிய நெறியைக் கைவிடாதவர்களுடைய; இயற்கையை இழந்தும் - இயல்பினைக் கை விட்டு நீங்கியும்; போரின் வில் அறம் துறந்தும் - போரில் வில் பிடித்து இயற்றும் அறத்தை விடுத்தும்; வாழ்வேற்கு - வாழ்பவனாகிய எனக்கு; இன்னன - இத்தகையன (நகரத்தில் நண்பர்களோடு இனிதாக இருத்தல் போன்றன); மேன்மை இல்லாச் சில் அறம் - சிறப்பில்லாத அற்ப ஒழுக்கங்களாகும; புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு - நான் செய்துள்ள தீமைகள் நீங்குமாறு; நல் அறம் தொடர்ந்த நோன்பின் - நல்ல அறத்தோடு பொருந்திய விரதத்தில் நின்று; நவை அற நாளும் நோற்பல் - குற்றம் நீங்க ஒவ்வொரு நாளும் தவம் செய்வேன். மனைவியைக் காத்தல் இல்லறத்தின் தருமமாகும். தான் மனைவியைப் பாதுகாவாது விட்டமை பற்றி 'இல்லறந் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும்' என்றான். தான் பூண்ட மானுட வேடத்திற்கேற்ப நடந்துகொள்வதால், தன் தெய்வத் தன்மையைப் பாராட்டாமல் இராமன் 'புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு நோற்பல்' என்றான். வில்லறம் துறந்தமை, வாலியை மறைந்துநின்று கொன்றதைக் குறித்தது எனலுமாம். இல்லறக் கடமையில் தவறியதோடு வில்லறச் செம்மையும் தன்மாட்டு இல்லையென்பதால் அப்பிழைகள் நீங்க நோன்பு செய்வதாக இராமன் கூறினான்என்க. 23 |