'நான்கு திங்கள் கடந்து படையொடு வருக' என இராமன் கூறுதலும் சுக்கிரீவன் விடைபெறுதலும் 4138. | 'அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி, ஆன்ற திரை செயற்கு உரிய சேனைக் கடலொடும், திங்கள் நான்கின் விரசுக, என்பால்; நின்னை வேண்டினென். வீர!' என்றான் - உரை செயற்கு எளிதும் ஆகி, அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான். |
உரை செயற்கு எளிதும் ஆகி - சொல்லுதல் எளியதாகி; அரிதும் ஆம் - கடைப்பிடித்தற்கு அரியதுமான; ஒழுக்கில் நின்றான் - நல்லொழுக்கத்தில் தளராது நிலை நிற்பவனாகிய இராமன்; வீர - (சுக்கிரீவனை நோக்கி) வீரனே!அரசியற்கு உரிய யாவும் - அரசாட்சிக்கு உரிய செயல்கள் எல்லாவற்றையும்; ஆற்றுழி ஆற்றி - செய்ய வேண்டிய முறைப்படி செய்து; ஆன்ற திரை செயற்கு உரிய - பெரிய அலைகள் வீசுதற்கு இடமான; சேனைக் கடலொடும் - கடல்போன்றசேனையொடும்; திங்கள் நான்கில் - நான்கு மாதங்கள் கழிந்த அளவில்; என்பால் விரசுக - என்னிடம் வந்து சேர்வாயாக; என்றான் - என்றுகூறினான். ஒழுக்கம் சொல்லுதற்கு எளிதாயினும் கடைப்பிடித்தற்கு அரிது ஆதலின் 'உரை செயற்கு எளிதும் ஆகி அரிது ஆம் ஒழுக்கு' எனப்பட்டது. 'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல்' (குறள் 664) என்றதும் காண்க. வனத்தில் இருந்து விரதம் காப்பேன் என்று நியமங்கள் பற்றிப் பேசுவது எளிது ஆயினும் அவற்றைக் கடைப்பிடிப்பது கடினம் என்பது இங்கு உணர்த்தப்பட்டது. அவற்றில் தளராது நிலைத்து நிற்கக் கூடியவன் இராமன் என்பதால் 'ஒழுக்கில் நின்றான்' என இராமன் சிறப்பிக்கப்பட்டான். சேனைக் கடல் - உருவகம் - சேனையில் உள்ளாரது வரிசை ஒழுங்குகைசை் சேனையாகிய கடலுக்கு அலையாகக் கருதுக. 24 |