அங்கதனுக்கு இராமன் அறிவுரை 4140. | வாலி காதலனும், ஆண்டு, மலர் அடி வணங்கினானை, நீல மா மேகம் அன்ன நெடியவன், அருளின் நோக்கி, 'சீலம் நீ உடையை ஆதல், இவன் சிறு தாதை என்னா, மூலமே தந்த நுந்தை ஆம் என, முறையின் நிற்றி.' |
ஆண்டு மலரடி வணங்கினானை - அப்பொழுது தன் மலர் போன்ற திருவடிகளில் வணங்கியவனான; வாலி காதலனும் - வாலியின் மகனான அங்கதனையும்; நீலமாமேகம் அன்ன நெடியவன் - நீல நிறம் வாய்ந்த சிறந்த மேகத்தையொத்த பெரியவனான இராமன்; அருளின் நோக்கி - கருணையோடு பார்த்து; நீ சீலம் உடையை ஆதல் - 'நீ ஒழுக்கம் உடையவன் ஆகுக; இவன் சிறு தாதை என்னா - இந்தச் சுக்கிரீவனை உன் சிறிய தந்தை என்று கருதாமல்; மூலமே தநத் நுந்தை ஆம் என - உன் பிறப்பிற்குக் காரணமாகிய உன் தந்தையாகவே கொண்டு; முறையின் நிற்றி - அவன் கட்டளைப்படி நிற்பாயாக! இப்பாடல் அடுத்த பாடலில் உள்ள 'என்றான்' என்பதனோடு இயையும். வணங்கினான் (ஆகிய) வாலி காதலனையும் என உருபு பிரித்துக் கூட்டுக. நீல மேகம் இராமனுக்கு உவமை. நெடியவன் = பெருமைக்குரியவன்; மாவலின் பொருட்டு நீண்டனுமாம். ஆதல் என்பதற்கு ஆதலால் என்றும் பொருள் கொள்ளலாம். 26 |