4141. என்ன, மற்று இனைய கூறி,
      'ஏகு அவன் - தொடர' என்றான்;
பொன் அடி வணங்கி, மற்று
      அப் புகழுடைக் குரிசில் போனான்;
பின்னர், மாருதியை நோக்கி,
      'பேர் எழில் வீர! நீயும்,
அன்னவன் அரசுக்கு ஏற்றது
      ஆற்றுதி, அறிவின்' என்றான்.

     என்ன மற்று - என்று மேலும்; இனைய கூறி - இத்தகைய
வார்த்தைகளைக் கூறி; அவன் - தொடர ஏகு என்றான் - 'அந்தச்
சுக்கிரீவனைத் தொடர்ந்து செல்வாயாக' என்று கூறினான்; மற்று - அதன்
பின்; அப்புகழுடைக் குரிசில் - புகழ் பொருந்திய சிறந்த அங்கதன்; பொன்
அடி வணங்கி -
(இராமனுடைய) பொன் போன்ற பாதங்களில் வணங்கி;
போனான் -
கிட்கிந்தை நகருக்குச் சென்றான்; பின்
னர்
மாருதியை நோக்கி -
அதற்குப் பிறகு (இராமன்) அனுமனைப் பார்த்து;
'பேர் எழில் வீர -
மிக்க அழகையுடைய வீரனே; நீயும் - நீயும் (சென்று);
அன்னவன் அரசுக்கு ஏற்றது -
அச்சுக்கிரீவனது அரசாட்சிக்கு ஏற்ற
காரியங்களை; அறிவின் ஆற்றுதி - உன் அறிவினால் செய்வாயாக;
என்றான்- என்று சொன்னான்.

     அ - பண்டறி சுட்டு; அனுமன் அழகு மிக்கவன் என்பதால் 'பேர் எழில்
வீர' என விளித்தான்.  அனுமனுக்குச் சுந்தரன் என்னும் ஒரு பெயர் உண்டு.
உருவ அழகு, வீரம், அறிவு ஆகிய மூன்றிலும் அனுமன் சிறந்தவன் என்பதை
இராமன் கூற்றால் அறிய முடியகிறது.                               27