4144. | 'ஆன்றவர்க்கு உரியது ஆய அரசினை நிறுவி, அப்பால், ஏன்று எனக்கு உரியது ஆய கருமமும் இயற்றற்கு ஒத்த சான்றவர், நின்னின் இல்லை; ஆதலால், தருமம்தானே போன்ற நீ, யானே வேண்ட, அத் தலை போதி' என்றான். |
ஆன்றவற்கு - (எல்லாப் பண்புகளும்) நிறைந்தவனான சுக்கிரீவனுக்கு; உரியது ஆய அரசினை - உரியதான அரசாட்சியை; நிறுவி - நிலைபெறச் செய்து; அப்பால் - அதற்குப் பிறகு; எனக்கு உரியது ஆய கருமமும் - எனக்கு ஆகவேண்டியதான காரியத்தையும்; ஏன்று - ஏற்றுக் கொண்டு; இயற்றற்கு ஒத்த சான்றவர் - செய்வதற்குத் தகுந்த பெரியோர்; நின்னின் இல்லை - உன்னை விட (வேறு எவரும்) இல்லை; ஆதலால் - ஆதலால்; தருமம் தானே போன்ற நீ - அறமே உருவெடுத்தாற் போன்ற நீ; யானே வேண்ட - நான் வேண்டுகின்றபடி; அத்தலைபோதி - அவ்விடத்திற்குச் (சுக்கிரீவனிடம்) செல்லக் கடவாய்; என்றான் - என்று உரைத்தான். முன்னிரு பாடல்களில் அனுமனின் பொய்யாமை, அன்பு, பொறுமை, அறிவு ஆகிய பண்புகள் போற்றப்பட, இப்பாடலில் தருமத்தின் வடிவமென அனுமனைக் குறித்தல் காண்க. 'நல் அற வீரன்' (5541) எனப் பின்னரும் கூறுதல் காண்க. தருமத்தின் வடிவமான இராமனால் 'தருமன் தானே போன்ற நீ' என அனுமன் போற்றப்படல் எண்ணிஇன்புறற்பாலது. 30 |