அனுமன் கிட்கிந்தை செல்ல,இராமலக்குவர் வேறோர் மலையை அடைதல் 4145. | ஆழியான் அனைய கூற, 'ஆணை ஈது ஆயின், அஃதே, வாழியாய்! புரிவென்' என்று வணங்கி, மாருதியும் போனான்; சூழி மால் யானை அன்ன தம்பியும், தானும் தொல்லை ஊழி நாயகனும், வேறு ஓர் உயர் தடங் குன்றம் உற்றார். |
ஆழியான் - சுதரிசனம் என்னும் சக்கரப்படையை உடைய திருமாலின் அவதாரமான இராமன்; அனைய கூற - அத்தகைய வார்த்தைகளைச் சொல்ல; மாருதியும் - (அது கேட்டு) அனுமனும்; வாழி - (இராமனை நோக்கி) வாழ்வாயாக!ஆணை ஈது ஆயின் - உன் கட்டளை இது வாயின்; அஃதே புரிவென் - நான் அதனையே செய்வேன்; என்று வணங்கிப் போனான் - என்று சொல்லி வணங்கி கிட்கிந்தையை நோக்கிச் சென்றான், தொல்லை ஊழி நாயகனும் - பழமையான பல ஊழிக்காலங்களுக்கும் தலைவனான இராமபிரானும்; சூழிமால் யானை அன்ன தம்பியும் - முகபடாத்தை உடைய பெரிய யானையை ஒத்த தம்பி இலக்குவனும்; தானும் - தானுமாக; வேறு ஓர் உயர் தடங்குன்றம் - உயர்ந்த பெரிய வேறோர் மலையை; உற்றார் - அடைந்தனர். அனுமன் இராமன் கட்டளையை ஏற்று விடைபெற்றதும் இராமனும் தம்பியுடன் வேறோர் மலையை அடைந்தான். இந்த மலையைப் பிரசிரவண மலை என்று வான்மீகமும் அத்யாத்ம இராமாயணமும் கூறும். இதற்கு மாலியவான் என்ற பெயருமுண்டு. வாழியாய்-இராமனை 'வாழி' என அனுமன் வாழத்தினான் என்பர். அடியவனாகிய அனுமன் இவ்வாறு வாழ்த்துவது முறையா என்றால், பக்தர்கள் அன்பு மேலீட்டால் அங்ஙனம் வாழ்த்துவது மரபாகும். பெரியாழ்வார் திருமாலுக்குப் பல்லாண்டு கூறியதும், பிள்ளைத்தமிழ்களில் பாட்டுடைத் தலைவனாகிய இறைவனுக்குக் காப்புக் கூறி வாழ்த்துவதும் இம்மரபை ஒட்டியே ஆகும். இறைவனை வாழ்த்துவதால், வாழ்த்துவார் நல் வாழ்வு பெறுவர் என்பதை 'வாழ்த்துவதும் வானவர்கள் தான் வாழ்வான்' (திருவாசகம், திருச்சதகம்-20) என்ற அடியால் உணரலாம். அரசனுடன் பேசுகையில் 'வாழ்க' என வாழ்த்திப் பேசும் மரபை இலக்கியங்களில் காணலாம். 'சூழியானை' என்பது நாட்டு யானையைக் குறிக்கும். காட்டில் திரியும் யானை போலன்றி, ஒரு பாகனுக்கு அடங்கி நடப்பது சூழியானை. அதுபோல் இலக்குவனும் அண்ணன் கட்டளைக்கு அடங்கி நடப்பவன் என்ற கருத்தும் புலனாகிறது. ஊழிநாயகன் தம்பியும் தானும் உற்றான் - தலைமை பற்றி வந்த திணை வழுவமைதி. ஆழியான் என்னும் சொல் கடல் போன்றவன், பாற்கடலில் பள்ளி கொள்பவன் என்னும் பொருள் படும் வகையில் அமைந்துள்ள சிறப்பையும் காணலாம். 31 |