4147. | வள அரசு எய்தி, மற்றை வானர வீரர் யாரும் கிளைஞரின் உதவ, ஆணை கிளர் திசை அளப்ப, கேளோடு, அளவு இலா ஆற்றல் ஆண்மை அங்கதன், அறம் கொள் செல்வத்து இளவரசு இயற்ற, ஏவி, இனிதினின் இருந்தான், இப்பால், |
வள அரசு எய்தி - எல்லா வளங்களும் பொருந்திய அரசாட்சியை அடைந்து; மற்றை வானர வீரர் யாரும் - மற்ற வானர வீரர்கள் யாவரும் கிளைஞரின் உதவ - சுற்றத்தார் போல வேண்டுவன செய்ய; ஆணை கிளர் திசை அளப்ப - (தனது) அரச ஆணை விளங்குகின்ற திசைகளின் எல்லையை அளாவவும்; அளவு இலா ஆற்றல் - அளவற்ற வலிமையும்; ஆண்மை அங்கதன் - வீரமும் உடைய அங்கதன்; கேளோடு - உறவினரோடு; அறம் கொள் செல்வத்து - அறவழியில் ஈட்டப்பட்ட செல்வத்தோடு; இளவரசு இயற்ற - இளவரசனாக ஆட்சி புரியுமாறு; ஏவி - கட்டளையிட்டு; இனிதினின் இருந்தான் - இனிமையாகக் கிட்கிந்தை நகரத்தில் வீற்றிருந்தான். இப்பால் - (அஃது அங்ஙனமாகவும்) இப்புறத்தில். . சுக்கிரீவன் செய்தியை இவ்வாறு கூறி, மேல் இராமன் செய்தியைக் கூறுகின்றார். ஆதலின் வேறுபாடு தோன்ற 'இப்பால்' என்றார். ஆணை கிளர் திசை அளப்ப - தனது கட்டளை தடையின்றி எங்கும் செல்ல; கிளைஞரின்-இன் ஐந்தாம் வேற்றுமை ஒப்புப் பொருளது. கேள் - அரசியல் சுற்றமும் உறவியல் சுற்றமும். இனிதினின் இருந்தான் - அங்கதன் இளவரசனாயிருந்து அரச காரியங்களைக் கவனித்து வரச் சுக்கிரீவன் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தான் என்க. 33 |