கதிரவன தென்திசை ஏகல்

கலிவிருத்தம்

4148. மா இயல் வட திசைநின்று,  வானவன்,
ஓவியமே என ஒளிக் கவின் குலாம்
தேவியை நாடிய, முந்தி, தென் திசைக்கு
ஏவிய தூது என, இரவி ஏகினான்.

     ஓவியமே என - ஓவியத்தில் தீட்டிய உருவமே போல; ஒளிக் கவின்
குலாம் -
ஒளி பொருந்திய அழகுடன் விளங்கும்; தேவியை நாடிய - (தன்
மனைவியான) சீதாதேவியைத் தேடும் பொருட்டு; முந்தி - (அனுமன் முதலிய
வானரவீரர்களை) அனுப்புவதற்கு முன்னரே; வானவன் -
தேவர்களுக்கெல்லாம் தேவனான இராமன்; தென்திசைக்கு ஏவிய - தெற்குத்
திசை நோக்கி அனுப்பிய; தூது என - தூதுவன் என்னுமாறு; இரவி -
கதிரவன்; மா இயல் வடதிசை நின்று- பெருமை பொருந்திய வடக்குத்
திசையிலிருந்து; ஏகினான் - தென்திசை நோக்கிச் சென்றான்.

     வடதிசையைப் பெரியதிசை, மங்களத்திசை, புண்ணியத் திசை என்று
கூறுவதால் 'மாஇயல் வடதிசை' என்றார்.  சூரியன் தென்திசையாக ஒதுங்கிச்
செல்லுதலை தட்சிணாயனம் என்பர்.  ஆடிமாதம் முதல் மார்கழி ஈறாக உள்ள
ஆறு மாதங்களும் இதன்கண் அடங்கும்.  இங்குக் கார்காலத்திற்குரிய
தென்திசை அயனம் தொடங்கியது என்பதாம்.  தட்சிணாயனத்தில்
இயல்பாகவே வடதிசையிலிருந்து தென்திசை செல்லும் சூரியனை, இராமன் தன்
தேவியைத் தேடத் தென்திசைக்குத் தூது என ஏவினான் எனக்கூறியது
தற்குறிப்பேற்ற அணியாகும்.  பின்னர் அனுமன் தென்திசை நோக்கிச்
செல்வானாதலின், கதிரவன் முந்திச் சென்ற தூது போன்றவனானான்.

     ஓவியமே என ஒளிக் கவின் குலாம் தேவி எனக் கூறும் கம்பர் 'அனங்க
வேள் செய்த ஓவியம்' (5079) என்றும் 'மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை'
(483) என்றும் பாராட்டுவர்.  ஒவியமே - ஏகாரம் தேற்றம்; குலவும் என்பது
குலாம் எனக் குறைந்து நின்றது; நாடிய - செய்யிய என்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சம்.                                                1