4151. நஞ்சினின், நளிர் நெடுங் கடலின், நங்கையர்
அஞ்சன நயனத்தின், அவிழ்ந்த கூந்தலின்,
வஞ்சனை அரக்கர்தம் வடிவின், செய்கையின்,
நெஞ்சினின், இருண்டது - நீல வானமே.

     நீல வானம் - நீல நிறம் வாய்ந்த வானமானது; நஞ்சினின் - விடம்
போலவும்; நளிர் நெடுங் கடலின் - குளிர்ந்த பெரிய கடல்
போலவும்; நங்கையர் அஞ்சன நயனத்தின் - பெண்களின் மை பூசிய
கண்களைப் போலவும்; அவிழ்ந்த கூந்தலின் - (அம்மகளிரின்) அவிழந்த
கூந்தலைப் போலவும்; வஞ்சனை அரக்கர்தம் வடிவின் - வஞ்சனைக்
குணமுடைய அரக்கர்களின் உடம்பு போலவும்; செய்கையின் - (அவர்களின்)
தீச்செயல் போலவும்; நெஞ்சினின் - (அவர்களின்) தீய மனம் போலவும்;
இருண்டது -
(கரிய மேகங்கள் பரவியதால்) கறுத்துத் தோன்றியது.

     இயல்பாக நீலநிறம் பொருந்திய வானம் கரியநிறமுடைய மேகங்கள்
பரவியதால் கருமையாயிற்று என்பதால் 'நீலவானம் இருண்டது' என்றார்.
நஞ்சும், கடலும், நங்கையர் நயனமும், கூந்தலும், அரக்கர் வடிவும் செயலும்
நெஞ்சமும் கரியவாதலின் அவற்றை வானம் இருண்டமைக்கு
உவமையாக்கினார். பல் பொருள் உவமை அணி.  கார்காலம் சீதையைப்
பிரிந்த இராமனுக்குப் பெருந்துன்பம் விளைத்தலால் அதற்கேற்ப நஞ்சினை
முதற்கண் உவமை கூறினார்.  இதனால் கார்காலம் நஞ்சுபோல் துன்பம்
விளைப்பது புலனாகிறது.  பிரிந்ததார்க்குத் துயர் விளைப்பதில் இருண்ட
கார்காலம் போல நளிர் நெடுங்கடலும் துயர் விளைப்பதால் அதையடுத்துக்
கூறினார்.  கருமை மிகுதியைத் தெரிவிக்க 'அஞ்சன நயனம்' என்றும்,
மேகத்தின் பரந்து விளங்கும் நிலை தெரிவிக்க 'அவிழ்ந்த கூந்தல்' என்றும்
கூறினார்.  அரக்கர் தம் வடிவு, செயல், நெஞ்சம் இராமனுக்குத் துயர்
விளைத்தல் வெளிப்படையாகும்.  செயலும் நெஞ்சும் அருவப்
பொருள்களாயினும் பாவச் செயலும், அதற்குக் காரணமான நெஞ்சையும்
கருநிறத்தன எனக்கூறுவது கவி மரபு ஆகும்.  ''வஞ்ச மாக்கள் வல்வினையும்,
அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலார் நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட
வான்'' (பெரிய புரா. தடுத் 159); 'அகங்குன்றி மூக்கில் கரியார் உடைத்து'
(குறள் - 277) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன.

     நங்கையர் நயனம், அவிழ்ந்த கூந்தல் எனப் பொதுப்படக்
கூறியிருப்பினும் சீதையின் நயனத்தைக் கருமுகிலும், செம்மைப்படுத்தப்படாது
விளங்கும் சீதையின் அவிழ்ந்த கூந்தலைத் திரளாகப் பரவிப் படர்ந்த மேகமும்
நினைப்பூட்டி வருத்துதற்குரியன என்று குறிப்பால் பெறப்படுகிறது.  இராமனை
வஞ்சித்த அரக்கர்தம் வடிவமும் செயலும் நெஞ்சும் வானம் இருண்டமைக்கு
வமையாயது, கதைத்தொடர்பிற்கேற்றஉவமையாகும்.                    4