4154. அரிப் பெரும் பெயரவன் முதலினோர் அணி,
விரிப்பவம் ஒத்தன; வெற்பு மீது, தீ
எரிப்பவும் ஒத்தன; ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவவும் ஒத்தன; - தெரிந்த மின் எலாம்.

     தெரிந்த மின் எலாம் - வானத்தில் மேகங்களில் காணப்படுகின்ற
மின்னல்களெல்லாம்; அரிப் பெரும் பெயரவன் முதலினோர் - அரி
என்னும் பெரும்பெயர்க்கு உரியவனாகிய இந்திரன் முதலிய தேவர் களுடைய;
அணி விரிப்பவும் ஒத்தன -
அணிகலன்கள் ஒளி வீசுவன வற்றையும்
நிகர்த்தன; வெற்பு மீது - மலைகள் மீது; தீ எரிப்பவும் ஒத்தன - நெருப்புப்
பற்றிப் பொருள்களை எரிப்பவற்றையும் போன்றன; ஏசு இல் ஆசைகள் -
பழித்தல் இல்லாத திசைகள்; சிரிப்பவம் ஒத்தன - சிரிக்கும் தன்மையையும்
ஒத்திருந்தன.

     தேவர்களுடைய அணிகலன்கள் விட்டுவிட்டு ஒளிர்வன போலவும்,
மலைகளில் மரங்கள் ஒன்றோடொன்று உரசுவதால் ஏற்படும் தீச்சுடர்
போலவும், திசைகள் ஒன்றையொன்று பார்ததுச் சிரிக்கும் நகையொளி
போலவும் மேகங்களின் மின்னல்கள் விளங்கின என்பதாம்.  உவமை அணி.
இந்திரன் மேகத்தை ஊர்தியாகக் கொண்டவனாதலின், மேகத்திலிருந்து தன்
அணிகலன்களை விரித்துப் பார்த்து மகிழ்வதற்கு உரியவன் என்னும் இயைபு
நோக்கி அரிப் பெரும் பெயரவன் என்பதற்கு இந்திரன் எனப் பொருள்
கொள்ளப்பட்டது.  பெரும் பெயர் - புகழ் பெற்ற பெயர்; முதலினோர் -
இந்திரன் சுற்றம் என்றும், அட்டதிக்குப் பாலர்கள் என்றும் கொள்வர். அரி-
இந்திரன், திருமால், அக்கினி முதலிய பல பொருள் குறிக்கும் வடசொல்.
ஈண்டு இந்திரனைக் குறித்தது.  எதிர் எதிர்த் திசைகளில் மாறி மாறித்
தோன்றும் மின்னலுக்கு 'ஆசைகள் சிரிப்பவும் ஒத்தன' என இல்பொருள்
உவமை கூறினார்.  ஏக - முதனிலைத்தொழிற்பெயர்.                  7