4155. மாதிரக் கருமகன், மாரிக்
      கார் மழை -
யாதினும் இருண்ட விண் -
      இருந்தைக் குப்பையின்,
கூதர் வெங் கால் நெடுந்
      துருத்திக் கோள் அமைத்து,
ஊது வெங் கனல்
      உமிழ் உலையும், ஒத்ததே.

     யாதினும் இருண்ட விண் - எல்லாப் பொருளைக் காட்டிலும் கறுத்த
ஆகாயமானது; மாதிரக் கருமகன் - திசையாகிய கருமான்; மாரிக் கார்
மழை -
மழைக் காலத்துக் கரிய மேகமாகிய; இருந்தைக் குப்பையின் -
கரிக்குவியலில்; வெம் கூதிர்க் கால் - கொடிய வாடைக் காற்றாகிய; நெடுந்
துருத்திக் கோள் அமைத்து -
பெரிய ஊதுலைத் துருத்தியின் வலிமையைக்
கொண்டு; ஊது வெங்கனல் - ஊதி எழுப்பிய வெம்மையான நெருப்புச்
சுடர்களை; உமிழ் உலையும் ஒத்ததே - வெளிப்படுத்துகினற உலைக்களத்தை
ஒத்து விளங்கியது.

     திசைகள் கருமானாகவும், கரிய மேகம் கரிக்குவியலாகவும், கூர்
துருத்தியாகவும், தீக்கொழுந்துள்ள மின்னலாகவும் உருவகிக்கப்பட்டன.  பல
பொருள்களைத் தம்முள் இயல்புடையவனாக உருவகித்திருப்பதால் இப்பாடலில்
இயைபு உருவக அணி அமைந்துள்ள.  செய்யும் முழுவதிலும் உருவகம்
காணப்படுவதால் முற்று உருவக அணி எனினும் அமையும்.  இரும்புத்
தொழில் செய்யும் கொல்லரைக் கருமகன் என்பர்.  கரும்பொன் என்ற
இரும்பில் பணி செய்வோன் ஆதலின் 'கருமகன்' எனப்பட்டான் போலும்.
கருமை வலிமையுமாம்; இருந்தை - கரி; 'இருந்தையின் எழு தீ ஒத்து' (2006)
என்றது காண்க.                                                8