4157.பிரிந்து உறை மகளிரும்,
      பிலத்த பாந்தளும்,
எரிந்து உயிர் நடுங்கிட,
      இரவியின் கதிர்
அரிந்தன ஆம் என,
      அசனி நா என,
விரிந்தன, திசைதொறும் - மிசையின்
      மின் எலாம்.

     மிசையின் - மேலே (வானத்திலே); திசைதொறும் மின் எலாம் -
எல்லாத் திசைகளிலும் ஒளி விடுகின்ற மின்னல்களெல்லாம்; பிரிந்து உறை
மகளிரும் -
தலைவரைப் பிரிந்து வாழும் மகளிரும்; பிலத்த பாந்தளும் -
பூமியின் கீழிடத்தில் உள்ள பாம்புகளும்; எரிந்து உயிர் நடுங்கிட - தவிர்த்து
உயிர் துடிக்கும்படி; இரவியின் கதிர் - சூரியனின் ஒளிக்கதிர்களை; அரிந்தன
ஆம் என -
அறுத்து வைத்தாற் போலவும்; அசனி நா என - இடியின்
நாக்கு இவை எனக் கருதுமாறும்; விரிந்தன - விளங்கின.

     தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் கார்காலத்தில் திரும்பி
வருவதாகக் கூறிச் செல்வான்.  கார்காலம் வந்தும் தலைவியின் துயர் நீங்கத்
தலைவன் வரவில்லையெனில்,  அவள் உயிர் நடுங்கல் இயல்பு.  இன்புற்று
மகிழும் காலம் கார்காலம்; கார்காலத்துப் பிரிவு, மகளிரை அதிகம்
துன்புறுத்தும் என்பதால் 'பிரிந்துறை மகளிர் உயிர் நடுங்கிட'  என்றார். பிரிவு
இருவர்க்கும் பொதுவாயினும் வருத்தம் பொறுக்கமாட்டாத அவர்கள்
மென்மைத் தன்மையை மனத்தில் கொண்டு அவர்களை மட்டுமே கூறினார்.
பாம்புகள், இடியோசையால் வருந்துதல் போல மின்னல் ஒளிக்கும்
வருந்துவதுண்டு.  'விரிநிற நாகம் விடருள தேனும் உருமின் கடுஞ்சினம்
சேணின்று முட்கும்' (நாலடி - 164) என்பதால் நாகம் இடியோசைக்கு நடுங்கும்
என்பதையும் 'பார்க்கடல் பருகி மேகம் பாம்பினம் பதைப்ப மின்னி' (சீவக
சிந்தா - முத்தி - 473) என்பதால் மின்னலுக்கும் பாம்பு பதைக்கும் என்பதும்
புலனாகின்றன.  இடிக்கும் மின்னலுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி இரண்டையும்
ஒன்றுபடுத்தி உரைத்தார்.  நெருப்பிற்கு நா இருப்பதாகக் கூறுவது மரபு
ஆதலின் நெருப்புமயமான இடிக்கும் நாக்கு உள்ளதாகக் கொண்டு அதனை
மின்னலுக்கு உவமை கூறினார்.  மின்னல்கள் ஒளியுடன் நீண்டு விளங்குவதால்
கதிரவனிடமிருந்து அரியப்பெற்ற கதிர்கள் உவமையாயின.  மின்னலைக் கண்டு
நடுங்கும் இயல்பில் ஒத்திருத்தல் பற்றி மகளிரையும், பாந்தளையும் சேர்த்துக்
கூறினார்.  'பிரிந்துறை மகளிரும்; பிலத்த பாந்தளும் எரிந்து உயிர் நடுங்கிட'
என்பதில் ஒப்புமைக் கூட்ட அணியும் 'இரவியின் கதிர் அரிந்த ஆம் என,
அசனி நா என' என்பதில் உவமை அணியும்அமைந்துள்ளன.          10