4158. | எண் வகை நாகங்கள், திசைகள் எட்டையும் நண்ணின நா வளைத்தனைய மின் நக; கண்ணுதல் மிடறு எனக் கருகி, கார் விசும்பு உள் நிறை உயிர்ப்பு என, ஊதை ஓடின. |
எண் வகை நாகங்கள் - எட்டுத் திசைகளிலும் உள்ள எட்டு வகைப் பாம்புகளும்; திசைகள் எட்டையும் - எட்டுத் திசைகளையும்; நண்ணின - (தாமிருக்கும் பாதலத்தை விடுத்துப் பூதலத்தில் வந்து) அடைந்தனவாய்; நா வளைத்தனைய - தம் நாக்குகளை நீட்டித் திசைகளை வளைத்தாற் போன்று; மின் நக - மின்னல்கள் ஒளி வீச; கார் விசும்பு - கரிய மேகங்கள்; கண்ணுதல் மிடறு எனக் கருதி - நெற்றிக் கண்ணையுடைய சிவபிரானின் கழுத்தின் நிறம போலக் கறுத்து; உள் நிறை உயிர்ப்பு என - தமக்குள் நிறைந்த மூச்சுக் காற்றை வெளியே விடுத்தாற் போல; ஊதை ஆட்டின - வாடைக் காற்றை வீசச் செய்தன. எண்வகை நாகங்கள் - வாசுகி, அநந்தன், தட்சகன், சங்க பாலன, குளிகன், பதுமன், மகாபதுமன், கார்க்கோடன் என்பன. இவை பூமியின்கீழ், நடுவிலிருந்து பூமியைத் தாங்குகின்ற ஆதிசேடனுக்கு உதவியாய்க் கிழக்கு முதலாய எட்டுத் திக்கிலும் முறையே கீழ் நின்று பூமியைத தாங்குவன. காசியப முனிவரது மனைவியருள் கத்துரு என்பவளிடம் தோன்றிய தெய்வத்தன்மை வாய்ந்தன இப்பாம்புகள். இவற்றைக் கடவுட் பாம்பெனக் குறிப்பிடுவர். அட்ட நாகங்களின் நாக்குகள் போல மின்னல்கள் மின்ன, சூல்கொண்டு கறுத்த மேகங்ளக், சூல் முதிர்ச்சியால் நெடிது உயிர்த்தாற்போலக் குளிர்காற்று வீசியது என்றதால் மின்னல், வாடை இவற்றின் கடுமை புலப்படுத்தப்பட்டது. விசும்பு - ஆகாயம், இங்கே இடவாகுபெயராய் மேகத்தைச் சுட்டியது. 'விசும்பின் துளி' (குறள் 16) என்ற இடத்து மேகத்தின் துளி என உரைப்பர் பரிமேலழகர், 'ஊதை என்பது வழக்கில் ஊதல் எனவும் வழங்கும். 'ஊதை ஊதின' எனப் பன்மையால் கூறியது, பல்வேறிடங்களில் தனித்தனி வீசுதல் பற்றி என்க. ''ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம்'' (82) என முன்னரும் கூறியது காண்க. 11 |