பருவமழை பெய்தல் 4161. | ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும், மின் கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும், தார்ப் பெரும் பணையின விண் தழங்கு காரினும், போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது - உம்பரே. |
ஆர்த்து எழு துகள் - பெரு முழக்கம் செய்துகொண்டு மேலே எழுகின்ற புழுதி; விசும்பு அடைத்தலானும் - ஆகாயத்தை மறைத்தலாலும்; மின் - மின்னல்கள்; கூர்ந்து எழு வாள் என - கூர்மை கொண்டு விளங்குகின்ற வாட்படை போல; பிறழும் கொட்பினும் - அசைந்து ஒளி வீசும் சுழற்சியானும்; விண் - மேகங்கள்; தார்ப் பெரும் பணையின் - மலர் மாலையணிந்த பெரிய முரசங்களைப் போல; தழங்கு காரினும் - ஒலிக்கின்ற கார் கால முழக்கினாலும்; உம்பர் - ஆகாயமானது; போர்ப் பெரும் களம் எனப் பொலிந்தது - பெரிய போர்க்களம் போன்று விளங்கியது. சேனைகள் செல்லும் போது அவற்றின் கால்கள் பட்டு எழும் புழுதி, வானத்தை மறைப்பது போல, இங்குக் காற்று அடித்ததால் தூசி மேல் கிளம்பி வானத்தை மறைத்தது. ''கதி கொண்ட சேனை நடவ எழு துகள் ககனம் சுலாவியநிலகதியுற'' (வில்லி.பார. பதினாறாம் போர்ச் -73) என்றது காண்க. வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் முரசு முழங்குதல் இயல்பு. தார்ப்பெரும்பணை. போர் முரசைத் தெய்வமாகக் கருதி மாலை சூட்டுவது தமிழர் வழக்கமாகும். விண் - இடவாகுபெயராய் மேகத்தைக் குறித்தது. காரணங்காட்டி உவமித்ததனால் ஏது உவமைஅணி. 14 |