4162. | இன் நகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல், மன்மதன் மலர்க் கணை வழங்கினான் என, பொன் நெடுங் குன்றின்மேல் பொழிந்த, தாரைகள் - மின்னொடும் துவன்றின மேக ராசியே. |
இன் நகைச் சனகியை - இனிய புன்முறுவலையுடைய சீதையை; பிரிந்தஏந்தல் மேல் - பிரிந்த இராமன் மேல்; மன்மதன் மலர்க்கணை வழங்கினான் என - மன்மதன் தன் மலர் அம்புகளை எய்தது போல; மின்னொடும் துவன்றின - மின்னல்களுடன் நெருங்கி நிறைந்த; மேக ராசி - மேகக் கூட்டங்கள்; பொன் நெடுங் குன்றின் மேல் - பொன் மயமான பெரிய மலையில் மேல்; தாரைகள் பொழிந்த - மழைத் தாரைகளைச் சொரிந்தன. ஏந்தல் - பெருமையில் சிறந்தவன் இராமன். பிரிந்து நிற்கும் நிலையில் மன்மதன் மலர்க்கணை எய்தல் இயல்பாதலின் 'பிாந்த ஏந்தல் மேல்' என்றார். சீதையின் புன்னகை, இராமன் துயரம் மிக, ஏதுவாயது கருதி, 'இன்னகைச் சனகி' என்றார். தாமரைப்பூ, மாம்பூ, அசோகப்பூ, முல்லைப்பூ, நீலோற்பலப்பூ என்னும் ஐந்தும் மன்மதனின் மலரம்புகளாம். அம்புமாரி எனக் கூறுதல் மரபு ஆதலின் மழைத்தாரைக்கு மன்மதனின் மலர்க்கணை வழங்கல் உவமையாயது. பொறுமை, சலியாமை, பெருமை, வண்மை முதலிய குணங்களை உடைய இராமன். அவ்வியல்புகளை உடைய மலைக்கு உவமையாகத் தக்கவன். பொன்னெடுங் குன்று என்றது, அப்பொழுது இராமன் தங்கியிருந்த பிரசிரவணம் என்னும்மலையை. 15 |