4163. | கல்லிடைப் படும் துளித் திவலை, கார் இடு வில்லிடைச் சரம் என, விசையின் வீழ்ந்தன; செல்லிடைப்பிறந்த செங் கனல்கள் சிந்தின, அல்லிடை, மணி சிறந்து, அழல் இயற்றல்போல். |
கல்லிடைப் படும் - (அந்த மலையிலுள்ள) கற்களின் இடையே (மேகங்கள்) சொரிகின்ற; துளித்திவலை - மழை நீர்த்துளிகள்; கார் இடு வில்லிடை - மேகங்களில் தோன்றிய இந்திர வில்லிலிருந்து பாய்கின்ற; சரம் என - அம்புகள் போல; விசையின் வீழ்ந்தன - வேகத்தோடு விழுந்தன; செல்லிடைப் பிறந்த - (அம்) மேகங்களிலிருந்து தோன்றிய; செங்கனல்கள்- செந்நிறம் கொண்ட இடியாகிய நெருப்புத் திரள்கள்; மணி அல்லிடைச் சிறந்து - மாணிக்கங்கள் இரவுக் காலத்தில் மிகுதியாக ஒளிவீசி; அழல் இயற்றல் போல் சிந்தின - நெருப்பொளி வீசுதல் போலச் சிந்தின. வில் - இந்திரவில். செல்வது என்ற இயல்பு பற்றி மேகம் 'செல்' எனப்பட்டது போலும். மழைத் தாரைகள் அம்புபோல வீழ, இரவில் மாணிக்க மணிகள் போல ஒளி வீசி இடிகள் சிந்தின என்பதால் நீர், நெருப்பு என இரண்டினையும் மேகம் பெற்றிருந்தமை புலனாகிறது. 16 |