4164. | மள்ளர்கள் மறு படை, மான யானைமேல் வெள்ளி வேல் எறிவன போன்ற, மேகங்கள்; தள்ள அரும் துளி பட, தகர்ந்து சாய் கிரி, புள்ளி வெங்கட கரி புரள்வ போன்றவே. |
மேகங்கள் - மேகங்கள் (பாறைகளின் மேல் மழைத் தாரை பொழிவது); மள்ளர்கள் - வீரர்கள்; மறுபடை மான யானைமேல் - பகைவர் படையிலுள்ள பெருமை வாய்ந்த யானைகளின் மேல்; வெள்ளி வேல் எறிவன போன்ற - வெண்ணிறமான வேல்கள் எறிவதைப் போன்றிருந்தன. தள்ள அரும் துளிபட - விலக்க முடியாத அரிய நீர்த் தாரைகள் விசையுடன் விழுவதால்; தகர்ந்து சாய் கிரி - சிதைந்து சாய்கின்ற மலைகள்; புள்ளி வெங்கட கிரி - புள்ளிகளையுடைய கொடிய மத யானைகள்; புரள்வ போன்ற - (அவ்வேல்கள் படுவதால்) புரண்டு விழுவன போன்றன. மள்ளர்கள் மேகங்களுக்கும், யானைகள் மலைகளுக்கும் வேல்கள் மழைத்தாரைகட்கும் உவமை. 'குன்றத் தன்ன தோர் பெருங்களிறு'' (புறநா.140) என்பதும் புறம். யானையின் மத்தகத்துப் புள்ளிகள் இருத்தல் நல்லிலக்கணம் ஆதலின் 'புள்ளி வெங்கடகிரி' என்றார். யானைகள் மீது வேல் எய்தல் பண்டைப் போர் முறையாகும். 'யானை பிழைத்த வேல்' (குறள் 772) 'கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்' (குறள் 774) 'விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்' (சீவக. 783) என்று வருவனகாண்க. 17 |