4165.வான் இடு தனு, நெடுங்
      கருப்பு வில்; மழை,
மீன் நெடுங் கொடியவன்;
      பகழி, வீழ் துளி;
தான் நெடுஞ் சார்
      துணை பிரிந்த தன்மையர்
ஊனுடை உடம்பு எலாம்
      உக்கது ஒத்ததே.

     மழை - மேகம்; மீன் நெடுங்கொடியவன் - மீனின் வடிவம்
எழுதப்பெற்ற உயர்ந்த கொடியை உடைய மன்மதனாக; வான் இடுதனு -
அம்மேகத்தில் தோன்றிய இந்திர வில்; நெடும் கருப்பு வில் - நீண்ட கரும்பு
வில்லாக; வீழ் துளி - (மேகத்தினின்று) விழுகின்ற மழைத்தாரைகள்; பகழி -
(மன்மதன் தொடுக்கும்) அம்புகளாக; நெடுஞ்சார் - நீண்ட மலைச் சாரல்கள்;
துணை பிரிந்த தன்மையர் -
தத்தம் துணைவர்களைப் பிரிந்த
இயல்புடையவராக; ஊன் உடை உடம்பு எலாம் - (மழைத் தாரைகள் மலைச்
சாரல்களைத் துளைத்தல் பிரிந்தாரின்) தசையுடன் கூடிய உடல்கள்
முழுவதையும்; உக்கது ஒத்தது - ஊடுருவியது போன்றது.

     மழையை மன்மதனாகவும் இந்திர வில்லைக் கரும்பு வில்லாகவும்,
வீழ்துளியைப் பகழியாகவும், நெடும் மலைச் சாரலைத் துணை பிரிந்த
தன்மையராகவும் பல பொருள்களைத் தம்முள் இயைபு உடையனவாக வைத்து
உருவகம் செய்ததால் இயைபு உருவக அணியாகும்.  இந்திரவில்லைத்
தன்னிடம் கொண்ட மேகம், வில்லிலிருந்து செலுத்தும் பகழி போல், மழைத்
தாரைகளை மலைகளில் பொழிவது துணை பிரிந்தாருடைய உடம்பில் காமன்
அம்புகள் ஊடுருவது போல் உள்ளது என்பதால் இப்பாடல் உருவகத்தை
அங்கமாகக் கொண்டு வந்த உவமை அணியாகும். மன்மதன் மீன் எழுதிய
கொடி உடையவனாதலி்ன் 'மீனிடு கொடியவன' எனக் காரணப் பெயரால்
குறித்தார். வானிடு தனு இந்திர வில், திருவில் என்றும் வழங்கப்பெறும். 'திருவில்
அல்லது கொலை வில் அறியார்' (புறநா - 20) என்றது காண்க.  பிரிவால்
உயிர்போய் ஊன் மட்டுமே உள்ள உடம்பு என்னும் பொருள் தோன்ற 'ஊன்
உடை உடம்பு' எனப்பட்டது.  சார் - சாரல்; விகாரம்; இம்மையில் மட்டுமன்றி
மறுமையிலும் தொடரும் உழுவலன்புடையவர் ஆதலின் 'நெடுஞ்சார் துணை'
என்றார்.  'பிறப்பால் அடுப்பினும் பின்னும் துன்னத்தகும் பெற்றியரே'
(திருக்கோவை 205); ''இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை,
யானாகிய நின் நெஞ்சு நேர்பவளே'' (குறுந். 49) என்பனகாண்க.        18