4170.முழங்கின முறை முறை மூரி மேகம், நீர்
வழங்கின, மிடைவன, - மான யானைகள்,
தழங்கின, பொழி மதத் திவலை தாழ்தரப்
புழுங்கின, எதிர் எதிர் பொருவ போன்றவே.

     மூரி மேகம் - வலிய மேகங்கள்; முறை முறை முழங்கின - மாறி
மாறி இடிமுழக்கம் செய்தனவாய்; நீர் வழங்கின - மழையைப் பொழிந்து
கொண்டு; மிடைவன - ஒன்றோடொன்று நெருங்குபவை; மான யானைகள் -
பெரிய யானைகள்; தழங்கின - பிளிறிக் கொண்டு; பொழி மதத் திவலை
தாழ்தர -
(தம் கவுள்களிலிருந்து) சொரிகின்ற மதநீர்த் தாரைகள் பெருகி விழ;
புழுங்கின -
சினங்கொண்டு; எதிர் எதிர் பொருவ - ஒன்றோடொன்று
எதிர்த்து நின்று போர் புரிவனவற்றை; போன்ற - ஒத்தன.

     யானைகள் நிறத்தாலும் வடிவத்தாலும் மேகங்கட்கு உவமை ஆயின.
இடி முழக்கத்திற்கு யானைகளின் பிளிறலும், மழை நீர்க்கு அவற்றின் மதநீரும்,
மேகங்களின் நெருக்கத்திற்கு யானைகள் போரிட நெருங்கும் தன்மையும்
உவமையாயின. முழக்கம், நீர் விழுதல், நெருங்குகுல் என்பன மேகம், யானை
ஆகிய இரண்டிற்கும் பொதுவாய் அமைவதால் உவம உருபு ஓரிடத்து மட்டும்
விரிந்துள்ளமை காணலாம்.  முழங்கின, வழங்கின, தழங்கின, புழுங்கின
என்பன முற்றெச்சங்கள்.  மிடைவன, பொருவ என்பன விணையாலணையும்
பெயர்கள்; போன்ற - முற்று; தாழ்தர - தரதுணைவினை.              23