4175. | வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த தாளுடைக் கோடல் தம்மைத் தழீஇயின, காதல் தங்க மீளல; அவையும் அன்ன விழைவன, உணர்வு வீந்த கோள் அரவு என்னப் பின்னி, அவற்றொடும் குழைந்து சாய்ந்த. |
வாள் எயிற்று அரவம் - வாள் போன்று கூரிய பற்களை உடைய பாம்புகள்; வான் தலை போல - (தம்முடைய) உயர்ந்த தலையைப் போல; தோன்ற வார்ந்த - தோன்றும்படி நீண்ட; தாளுடைக் கோடல் தம்மை - தண்டினை உடைய வெண்காந்தள் செடிகளை; காதல் தங்கத் தழீஇயின - (தம்மினப் பாம்பென எண்ணிக்) காதல்பொருந்தத் தழுவினவாய்; மீளல - விட்டு நீங்காமல் இருந்தன; அவையும் - அவ்வெண்காந்தள் செடிகளும்; அன்ன விழைவன - அத்தகைய தழுவலில் விருப்பமுடையனவாய்; உணர்வு வீந்த - காமத்தால் உணர்விழந்த; கோள் அரவு என்ன - கொடிய (பெண்) பாம்புகள் போல; அவற்றொடும் பின்னி - அப்பாம்புகளுடன் பின்னிக் கொண்டு; குழைந்து சாய்ந்த - சாய்ந்து கிடந்தன. பாம்புகள் உயர்த்தும் படம்போல் மலர்ந்த வெண் காந்தள் செடிகளைப் பாம்பெண எண்ணி நாகங்கள் தழுவ, அந்தச் செடிகளும் நாகங்கள் ஒப்ப, அவற்றைத் தழுவின என்பதால் வெண்காந்தள் செடிகட்கும் பாம்புகட்கும் (தோற்றத்தில்) வேறுபாடின்மை புலனாம். 'கடிகனைக் கவினிய காந்தளங் குலையினை, அருமணியவிருத்தி அரவு நீர் உணல் செத்து (கலி-45), ''அணர்த்தெழு பாம்பின் தலைபோல் புணர்கோடல் பூங்குலை யீன்ற புறவு'' (கார்-நாற்-11), ''அரவு பைத் தாவித் தன்ன அங்காந்தள் அவிழ்ந்தலர்ந்தது'' (சீவக-1651) 'கோடல் அரவீனும்' (சம்பந்-தேவாரம்-3-79-11) ''பாம்பாய். . . தண் கோடல் வீந்து'' (திணைமாலை-119), ''பாம்புபை அவிழ்ந்தது போலக் கூம்பிக் கொண்டலின் தொலைந்த ஒண்செங்காந்தள்'' (குறுந்-185) என்பன ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன. நாகங்கள் ஈருடலும் ஓருடலாகத் தோன்றுமாறு பின்னிப் புணர்தல் அவற்றின் இயல்பாகும். ''தோளும் தாளும் பிணைந்துரு வொன்றெய்தி, நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ'' (சீவக 1347), ''மாசுண மகிழ்ச்சி மன்ற'' (சீவக 189); 'நலத்தகு நாகத்துறைவார் போல இன்ப மகிழ்ச்சியொடு' (பெருங்-4-4-100-101) என்னும் அடிகள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. இச்செய்யுள் மயக்க அணி. பாம்பின் உணர்வு செடிகட்கும் இருந்ததாகக் கூறியது கற்பனை எனலாம். உற்று உணர்தல் ஓரறிவுயிரான செடிகட்கும் உண்டாதலின் அவை இன்ப உணர்ச்சி உற்றனவாகக் கம்பர் கூறினார் எனவும் கொள்ளலாம். 28 |