நாடக அரங்கு 4179. | கிளைத் துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த; மின்னும் துளிக் குரல் மேகம் வள் வார்த் தூரியம் துவைப்ப போன்ற; வளைக் கையர் போன்ற, மஞ்ஞை; தோன்றிக அரங்கின்மாடே விளக்குஇனம் ஒத்த; காண்போர் விழி ஒத்த, விளையின் மென்பூ. |
கிளைத் துணை மழலை வண்டு - கைக்கிளை என்னும் இசைக்கு நிகராக ஒலிக்கும் வண்டுகள்; கின்னரம் ஒத்த - யாழை ஒத்தன; மின்னும் துளிக்குரல் மேகம் - மின்னுவனவும், மழைத் துளியையும், இடியோசையையும் உடைய மேகங்கள்; வள்வார்த் தூரியம் துவைப்ப போன்ற - அடர்ந்த தோல் வாரினால் கட்டப்பட்ட மத்தளம் ஒலிப்பதைப் போன்றிருந்தன; மஞ்ஞை - மயில்கள்; வளைக்கையர் போன்ற - வளையலணிந்த கையினையுடைய மகளிரைப் போன்றன; தோன்றிகள் - செங்காந்தள்மலர்கள்; அரங்கின் மாடே - நாட்டியமாடும் இடத்தில்; விளக்கு இனம் ஒத்த - ஏற்றிவைக்கப்பட்ட விளக்குகளின் கூட்டத்தை ஒத்தன; விளையின் மென்பூ - கருவிளையின் மென்மையான மலர்கள்; காண்போர் விழி ஒத்த - பார்ப்பவர்களுடைய கண்களைப் போன்றன. கிளை - ஏழிசைகளில் ஒன்று (பிற - குரல், துத்தம், உழை, இளி, விளரி, தாரம் என்பன) கர்நாடக இசையில் உள்ள சட்சமம முதலிய ஏழிசைகளுள் மூன்றாவதான காந்தரமே இந்தக் கைக்கிளை என்பர். 'மந்தார மாலை மலர் வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன், கந்தாரம் செய்து களிவண்டு முரன்று பாட' (சீவக. சிந் - 1959) என்றது காண்க. மஞ்ஞை மகளிர்க்குச் சாயலால் உவமை. விளை என்பது கருவிளை என்பதன் முதற்குறையாகும். கருவிளை கண்களுக்கு உவமையாதலைக் 'கரு விளை கண்மலர்போல் பூத்தன' (கார்நாற் - 9); 'கண்ணெனக் கருவிளை மலர' (ஐங்குறு - 464) என்பனவற்றாலும் அறியலாம். நாடக அரங்கிற்கு இயைபுடையவற்றை உவமஞ் செய்தலால் இப்பாடல் இயைபு உவமை அணி பொருந்தியது. ஒவ்வொரு தொடரிலும் உவம உருபு வந்தமையால் பல்வயிற் போலி உவமையுமாம். மஞ்ஞை போன்ற வளைக்கையர் என்றும் விளையைப் போலும் விழி என்றும் கூறாமல் மாற்றிக் கூறியது எதிர்நிலை அணியாகும். 'ஆடமைக்குயின்ற அவிர் துளை மருங்கின், கோடை யவ்வளி குழலிசையாகப், பாடின்னருவிப் பனி நீரின்னிசைத், தோடமை முழவின் துதை குரலாகக், கணக்கலை யிகுக்கும் கடுங்குரல் தூம்போடு, மலைப்பூஞ் சாரல் வண்டு யாழாக, இன்பல் இமிழ் இசை கேட்டுக் கலிசிறந்து, மந்தி நல்லவை மருள்வன நோக்கக், கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில், நனவுப்புகு விறலியின் தோன்றும்'' (அகநா. 82); 'குழலிசை தும்பி கொளுத்திக்காட்ட, மழலை வண்டினம் நல்யாழ் செய்ய, வெயில் நுழைபு அறியா குயினுழை பொதும்பர், மயிலாடு அரங்கில் மந்தி காண்க காண்' (மணி - 4 - 3 - 6); 'தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கம் தாங்கக், கொண்டல்கள் முழவினேங்கக் குவளை கண் விழித்து நோக்கத், தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின், வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ' (35) என்னும் பாடல்கள் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. 32 |