4180. | பேடையும் ஞிமிறும் பாயப் பெயர்வுழிப் பிறக்கும் ஒசை ஊடுறத் தாக்கும்தோறும் ஒல் ஒலி பிறப்ப, நல்லார் ஆடு இயல் பாணிக்கு ஒக்கும்; ஆரிய அமிழ்தப் பாடல் கோடியர் தாளம் கொட்டல், மலர்ந்த கூதாளம் ஒத்த. |
ஞிமிறும் பேடையும் - ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும்; பாயப் பெயர்வுழி - ஒன்றன் மீது ஒன்று மோதுவது போல வேகத்தோடு வரும்பொழுது; பிறக்கும் ஓசை - உண்டாகின்ற ஓசையும்; ஊடுறத் தாக்கும் தோறும் - (அவை) ஒன்றையொன்று மோதும் பொழுதெல்லாம்; பிறப்ப ஒல் ஒலி - பிறப்பனவாகிய ஒல் எனும் ஓசையும்; நல்லார் ஆடு இயல் - அம்மலையில் நாடகமகளிர் ஆடு்ம் கூத்தின் இயல்பிற்கேற்ற; பாணிக்கு ஒக்கும் - கைத்தாளத்தை ஒத்திருக்கும்; மலர்ந்த கூதாளம் - மலர்ந்த கூதள மலர்கள்; ஆரிய அமிழ்தப் பாடல் - (அவர்கள் பாடிய) சிறந்த அமுதம் போன்ற பாடல்களுக்கு ஏற்ப; கோடியர் தாளம் கொட்டல் ஒத்த - நட்டுவர் தாளம் கொட்டுவதை ஒத்தன. மிஞிறு - ஞிமிறு - இலக்கணப்போலி; முன்னே பேடை என்றதால் 'மிஞிறு' ஆண் வண்டாயிற்று. முன் செய்யுளில் மயில்கள் ஆடும் நாடக அரங்கைக் காட்டியவர், இப்பாடலில் அவ்வரங்கில் நிகழும் கூத்திற்கேற்ப வண்டுகள் எழுப்பும் ஓசை தாளமாகவும், மலர்ந்த கூதளமலர்கள் தாளம் கொட்டுவதை ஒத்தும் விளங்குவதைக் காட்டுகிறார். இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி. கூதாளச் செடிகளின் மலர் வடிவம் தாளம் போலிருக்கும் கூதாளி - கூதளம், தாளி, நறுந்தாளி எனவும்படும். 33 |