காட்டாறும் கொன்றையும்

4181. வழை துறு கான யாறு,
      மா நிலக் கிழத்தி, மக்கட்கு
உழை துறு மலை மார்க் கொங்கை
      சுரந்த பால் ஒழுக்கை ஒத்த;
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு
      உதவ வேண்டி,
குழைதொறும் கனகம் தூங்கும்
      கற்பகம் நிகர்த்த, கொன்றை.

     வழை துறு - சுரபுன்னை மரங்கள் அடர்ந்த; 'கானயாறு - காடுகளில்
பெருகிய நதிகள்; மாநிலக் கிழத்தி - நிலமகள்; மக்கட்கு - தன் மக்கள்
பொருட்டு; உழை துறு மலை மாக்  கொங்கை - புடை பருத்த
மலைகளாகிய தன் பெரிய மார்பகத்திலிருந்து; சுரந்த பால் ஒழுக்கை ஒத்த -
(அன்பினால்) சுரந்து பெருகவிட்ட பாலின் தாரைகளைப்  போன்று இருந்தன;
கொன்றை -
(பொன் போன்ற மலர்கள் பூக்கும்) கொன்றை மரங்கள்;
விழைவுறு வேட்கையோடும் -
(பொருட்களை) விரும்பும் ஆசையால்;
வேண்டினர்க்கு உதவ வேண்டி -
வேண்டியவர்களுக்குக் கொடுக்க வேண்டி;
குழைதொறும் கனகம் தூங்கும் -
தளிர்கள்தோறும் பொன்னைத்
தொங்கவிட்டுக் கொண்டிருக்கும்; கற்பகம் நிகர்த்த - கற்பக மரங்களை
ஒத்தன.

     நிலமகளுக்கு மலைகளைக் கொங்கைகளாகக் கூறும் இலக்கிய மரபு
உண்டு.  'பணைத்தோள் மாநில மடந்தை அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம்
போல' (சிறுபாண். 1 - 2); 'சோதி மதி வந்து தவழ் சோலை மலையொடு
இரண்டாய், மேதினியாள் கொங்கை நிகர் வேங்கடமே' (திருவேங்கடமாலை-2)
'கொங்கையே பரங்குன்றமும் கொடுங்குன்றும்' (திருவிளை - நகர -2); எனப்
பலரும் கூறுதல் காண்க.  மக்கட்கு நிலமகளின் கொங்கை சுரந்த
பாலொழுக்கை ஆறு ஒக்கும் என்றார். 'சரயு என்பது தாய்மலை அன்னது'
(23); ''சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரைபுனல்
கன்னிகொண்டு இழிந்த தென்பவே'' (சீவக - 39) என்றமை காண்க.
இப்பாடல் தற்குறிப்பேற்ற அணி அமைந்தது.  மாநிலக் கிழத்தி, மலைமாக்
கொங்கை என்பன உருவகங்கள்.                                  34