அருவி பெருகலும் தாமரை மலர்தலும் 4184. | களிக்கும் மஞ்ஞையை, கண்ணுளர்இனம் எனக் கண்ணுற்று, அளிக்கும் மன்னரின், பொன் மழை வழங்கின அருவி; வெளிக்கண் வந்த கார் விருந்து என, விருந்து கண்டு உள்ளம் களிக்கும் மங்கையர் முகம் என, பொலிந்தன, கமலம். |
களிக்கும் மஞ்ஞையை - (கார்காலத்தில்) களித்து ஆடும் மயிலி னங்களை; கண்ணுளர் இனம் என - கூத்தர்களின் இனமான விறலியர் என்று கருதி; கண்ணுற்று - (அவை ஆடும் கூத்தைப்) பார்த்து; அளிக்கும் மன்னரின் - (பொன்னைப் பரிசாக) வழங்கும் அரசர்களைப் போல; அருவி - மலையருவிகள்; பொன் மழை வழங்கின - பொன்னை மிகுதியாகச் சொரிந்தன. வெளிக்கண் வந்த கார் - விண்வெளியில் வந்த மேகங்களை; விருந்து என - விருந்தாளிகள் எனக் கருதி; விருந்து கண்டு - விருந்தினரைக் கண்டு; களிக்கும் மங்கையர் முகம் என - மனம் மகிழும் மகளிரின் முகம் போல; கமலம் பொலிந்தன - தாமரை மலர்கள் நீர்நிலைகளில் மலர்ச்சி பெற்றன. கண்ணுளர் - கூத்தர், கண்ணுள் - கூத்து, இனி, கண்ணுளர் - அறுபதடி மூங்கில் கம்பத்தில் ஏறி ஆடும் கூத்தாடிகளுமாம் - கண் - கணு; மூங்கிற்கு ஆகுபெயர். அருவி மலையிலுள்ள பொன்னை அடித்து வரும் இயல்புடையது. 'அவர் மலைப் பொன்னாடிவந்த புதுப்புனல்' (சிலப்.24 - 4), 'தேனளாவியும் செம்பொன் விராவியும். . . . வானவில்லை நிகர்த்தது அவ்வாரியே' (19), ''முத்து ஈர்த்துப் பொன் திரட்டி'' (4467), என்பன காண்க. காவிரி பொன்னைப் பெற்று வந்தமையால் பொன்னி என்ற பெயர் பெற்றதும் காண்க. இயல்பாகப் பொன்னை அரித்து வரும் அருவியை மயிலாகிய விறலியின் ஆடல் கண்டு பரிசாகப் பொன்னை வழங்கியதாகக் கூறியது தற்குறிப்பேற்றம். வெளியில் விருந்தினரைக் கண்ட போதே மகளிர் முகமலர்ந்து வரவேற்றல் முறையாகும். கண்ட மாத்திரத்து மகிழும் மகளிர் முகம் போலக் கார்காலமழை பெய்த அளவில், தாமரை மலர்ந்ததாக உவமை கூறினார். மகளிர் விருந்தோம்பும் சிறப்பப் பல இலக்கியங்கள் பேசுகின்றன. 'விருந்தினர் முகம் கண்டு, அன்ன விழா அணி விரும்புவாரும்' (46), 'பெருந் தடங்கண் பிறை நுதலார்க்கெல்லாம். . . . . விருந்துமன்றி விளைவன யாவையே' (67) 'விருந்து கண்ட போது என் உறுமோ?' என்று விம்மும்'', (5083) 'தொல்லோர் சிறப்பின், விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை' (சிலப் - 16. 73) என்பன காண்க. விருந்தோம்பலின் முதலில் வேண்டப்படுவது இன்முகம் ஆதலால் 'களிக்கும் மங்கையர் முகம்' என உரைத்தார். 'முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து' (குறள் 90) என்றார் வள்ளுவப் பெருந்தகை. 37 |