அன்னம், கொக்கு முதலிய பறவை இனங்கள் 4187. | நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உறப் பிரிந்து வாடுகின்றன, மருளுறு காதலின் மயங்கி, கூடு நல் நதித் தடம்தொறும் குடைந்தன, படிவுற்று ஆடுகின்ற - கொழுநரைப் பொருவின் - அன்னம். |
நெடிது உறப் பிரிந்து - (நதிகளை) நெடுநாட்களாகப் பிரிந்திருந்து; நெஞ்சு உறு நீடு நேயத்தால் - உள்ளத்தில் பொருந்திய மிக்க அன்பினால்; வாடுகின்ற - வாட்டம் அடைந்தனவாயிருந்து; மருளுறு காதலின் மயங்கி - (கார்காலம் வந்த அளவில்) மயக்கத்தைத் தரும் காதலோடு மயங்கி; கூடு நல் நதித்தடம் தொறும் - (தாம்) வந்து சேரப்பெற்ற சிறந்த நதிகளின் இடம்தோறும்; குடைந்தன - துளைந்து; படிவுற்று ஆடுகின்றன - நீராடி விளையாடுகின்றனவான; அன்னம் - அன்னப் பறவைகள்; கொழுநரைப் பொருவின - (தலைவியரைச் சேர்ந்த) கணவரைப் போன்றன. கோடை காலத்தில் நீர் வற்றியதால் நீர்நிலைகளைப் பிரிந்து சென்றிருந்தது, கார் காலத்தில் அவற்றில் நீர் நிறைந்தமை உணர்ந்து வந்து அவற்றில் படிந்து குடைந்து ஆடும் அன்னங்கள், பல நாட்கள் பிரிந்து சென்றிருந்தது, கார் காலம் வந்த அளவில் திரும்பி வந்து காதலால் தலைவியரைத் தழுவி மகிழும் தலைவரைப் போன்றன. உவமை அணி. நீடு பிரிந்திருந்து வாடுதலும், கார்காலம் வந்தவுடன் மகிழ்ந்தாடுதலும் அன்னங்களுக்கும் தலைவர்க்கும் ஒத்தலின் 'கொழுநரைப் பொருவின அன்னம்' என்றார். 40 |