4189. | மருவி நீங்கல்செல்லா நெடு மாலைய, வானில் பருவ மேகத்தின் அருகு உறக் குருகுஇனம் பறப்ப, 'திருவின் நாயகக் இவன்' எனத் தே மறை தெரிக்கும் ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த. |
மருவி நீங்கல் செல்லா - ஒன்று சேர்ந்து ஒன்றைவிட்டு ஒன்று நீங்காமல்; நெடு மாலைய - நீளமாக வரிசைப்பட்டனவாய்; வானில் - வானத்தில்; பருவ மேகத்தின் அருகு உற - கார்கால மேகத்தின் அருகே பொருந்துமாறு; பறப்ப குருகு இனம் - பறப்பனவாகிய நாரையின் கூட்டங்கள்; திருவின் நாயகன் இவன் என - 'திருமகளின் கணவன் இவன் என்று'; தே மறை தெரிக்கும் - தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களால் தெளிவிக்கப்படுகின்ற; ஒருவன் மார்பினின் - ஒப்பற்ற திருமாலின் மார்பில் சாத்திய; உத்தரியத்தினை ஒத்த - மேலாடையை ஒத்து விளங்கின. கரியமேகத்தின் அருகில் தொடர்ந்து பறந்த நாரைகளின் வரிசை திருமாலின் மார்பில் சாத்திய வெண்பட்டு உத்தரீயம் போல் விளங்கியது. இதுவும் நிறமும் தோற்றமும் பற்றி வந்த உவமை அணி. நாரையின் காலிலுள்ள சிவப்பு நிறம் மேலாடையின் கரைபோல் விளங்கியது. குருகு - பறவைப் பொதுப்பெயர், இங்கு நாரையைக் குறித்தது. நாரைகள் நெருக்கம் கலையாது வரிசைப்பட்டுச் செல்வதை மருவிநீங்கல் செல்லா நெடு மாலைய' என்றார். 'நீர் செல நிமிர்ந்த மாஅல் போல. . . எழிலி' (முல்லை - 3 - 5) என்ற அடிகளில் மேகத்திற்குத் திருமாலை உவமை கூறியது காண்க. 'மீயோங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப, ஓயா அருவித்திரள் உத்தரியத்தை ஒப்ப, தீயோர் உளர் ஆகிய கால், அவர் தீமை தீர்ப்பான், மாயோன் மகரக் கடல் நின்று எழு மாண்பது ஆகி' (4780) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. தே மறை - வேதத்திற்குத் தெய்வத்தன்மை என்பது எப்போதும் ஒரேமாதிரி நிலைத்திருத்தல், இறைவனால் வெளிப்படுத்தப்படல், பொருள்களின் இயல்பை உள்ளபடி அறிவித்தல், அனைவராலும் சிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்படல்முதலியனவாம். 42 |