செந்தாமரை மலர்களும் கொடிகளும்

4192.செஞ் செவ் வேலவர், செறி
      சிலைக் குரிசிலர், இருண்ட
குஞ்சி சேயொளி கதுவுறப்
      புது நிறம் கொடுக்கும்
பஞ்சி போர்த்த மெல் அடி
      எனப் பொலிந்தன, பதுமம்;
வஞ்சி போலியர் மருங்கு
      என நுடங்கின, வல்லி.

     செஞ் செவ் வேலவர் - செக்கச் சிவந்த வேலையுடையவரும்; செறி
சிலைக் குரிசிலர் -
கட்டமைந்த வில்லை ஏந்தியவருமான தலைவர்களின்;
இருண்ட குஞ்சி -
கருநிறமான தலைமுடி; சேயொளி கதுவுற - சிவந்த
ஒளியைப் பற்றிக் கொள்ளுமாறு; புதுநிறம் கொடுக்கும் - (அதற்குப்) புதிய
நிறத்தைக் கொடுக்கும்; பஞ்சி போர்த்த மெல்லடி என - செம்பஞ்சுக்
குழம்பு மிகுதியாக பூசப்பெற்ற மென்மையான (மகளிரின்) பாதங்கள் போல;
புதுமம் பொலிந்தன -
தாமரை மலர்கள் விளங்கின.  வஞ்சி போலியர்
மருங்க என -
வஞ்சிக் கொடி போன்ற வடிவுடைய அம்மகளிரின் இடை
போன்றது; வல்லி நுடங்கின - பூங்கொடிகள் அசைந்தன.

     பகைவர்கள் பலரைக் கொன்றதனால் கறைபட்ட குருதியின் மிகுதி காட்ட
'செஞ் செவ் வேலவர்' என இரண்டடை கொடுத்தார்.  மகளிரின் ஊடல்
தீர்க்க, ஆடவர் அம்மகளிரின் கால்களில் பணிதலும், பணிந்த தலைவர்களின்
தலையில் அம்மகளிர் கால்படுவதால், பாதத்தில் ஊட்டப் பெற்ற
செம்பஞ்சுக்குழம்பு ஆடவரின் கருமையான முடியில் செந்நிறம் படுதலும்
உண்டு என்று இலக்கியங்கள் பேசும், 'செஞ்சிலைக் கரத்தர், மாதர் புலவிகள்
திருத்திச் சேந்த குஞ்சியர்' (499); 'ஊடலில் கனன்று மறித்த நோக்கியர் மலரடி
மஞ்சுளப் பஞ்சி குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி' (4866)
என்பன கம்பர் வாக்கு; 'புலந்தவர் கொடியென நடுங்கிப் பொன்னரிச்
சிலம்பொடு மேகலை மிழற்றச் சென்னி மேல் அலங்கல்வாய் அடிமலர்
அணிந்து. . . . ஏகினாள்' (சிந்தா - 1019) என்ற தேவர் வாக்கும் ஈண்டு ஒப்பு
நோக்கத்தக்கது.  புலந்து தலைவர் முடிமீது அடிமலர் வைக்கையல் தலைவியர்
இடை நடுங்குவது போலக் கொடிகள் நுடங்கின என்க. தலை முடியின்
இயற்கைக் கருநிறம் மாறிச் செந்நிறம் கொண்டு விளங்கும் என்பதைப்
'புதுநிறம் கொடுக்கும்' எனக் குறிப்பிட்டார்.  நிறம், மென்மை, அழகு
ஆகியவற்றால் தாமரை மலர்க்குச் செம்பஞ்சு ஊட்டிய அடிகளும், மெலிவு,
நுடக்கம் ஆகியவற்றால் கொடிகட்கு மகளிர் இடையும்  உவமம்.  மகளிர்
அடிக்குத் தாமரையும், இடைக்கு வல்லியும் உவமையாக்கப்படுதலின்
எதிர்நிலை உவமை அணியாகும்.                                 45