நானில மலர்கள் 4195. | வேங்கை நாறின, கொடிச்சியர் வடிக் குழல்; விரை வண்டு ஏங்க, நாகமும் நாறின, நுளைச்சியர் ஐம்பால்; ஓங்கு நாள்முல்லை நாறின, ஆய்ச்சியர் ஓதி; ஞாங்கர், உற்பலம் உழத்தியர் பித்திகை நாற. |
கொடிச்சியர் வடிக்குழல் - குறிஞ்சி நிலத்துக் குறத்தியரின் திருத் தப்பட்ட கூந்தல்; வேங்கை நாறின - வேங்கை மலர்களின் மணம் கமழப் பெற்றன. நுளைச்சியர் ஐம்பால் - நெய்தல் நிலத்தில் வாழும் நுளைச்சியரின் ஐந்து வகையாகப் பிரித்துப் போடப்படும் கூந்தல்; விரை வண்டு ஏங்க - விரைந்து வரும் இயல்பினதாகிய வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்க; நாகமும் நாறின - சுரபுன்னை மலர்களின் மணம் வீசின. ஞாங்கர் - பக்கத்தில்; உழத்தியர் பித்திகை - மருதநிலத்து உழவப்பெண்களின் கூந்தல்; உற்பலம் நாற - செங்கழுநீர் மலர்களால் மணத்தைப் பரப்ப; ஆய்ச்சியர் ஓதி - முல்லை நிலத்து ஆய்ச்சியரின் கூந்தல்; ஓங்கு நாள் முல்லை நாறின - சிறந்த அன்றலர்ந்த முல்லை மலர்களால் மணம் கமழ்ந்தன. கிட்கிந்தை மலை நானில வளம் மிக்கது என்பதைக் காட்ட, நானிலக் கருப் பொருள்களான வேங்கை, சுரபுன்னை, முல்லை, செங்கழுநீர் மலர்களைக் கூறினார். கொடிச்சியர், நுளைச்சியர், ஆய்ச்சியர், உழத்தியர் என்போர் நானில மகளிராவர். குழல், ஐம்பால், ஓதி, பித்திகை என்பன கூந்தல் என்ற ஒரு பொருளைக் குறித்த சொற்கள். 'நாறின' என்ற சொல் செய்யுளில் நான்கிடத்தும் ஒரே பொருளில் வந்தமையால் சொற்பொருள் பின்வரு நிலை அணியாம். வேங்கை, நாகம், முல்லை, உற்பலம் என்பன முதலாகு பெயராய் மலர்களைக் குறித்தன. வடிக்குழல் - திருத்தம் செய்யப்பட்ட கூந்தல், வாரி முடித்த கூந்தல் என்பதாம். ஐம்பால் - ஐந்து பகுப்புடையது. முடியை உச்சியில் முடித்தலாகிய முடியும், பக்கத்தில் முடித்தலாகிய கொண்டையும், பின்னே செருகுதலாகிய சுருளும், சுருட்டி முடித் தலாகிய குழலும், பின்னி விடுதலாகிய பனிச்சையுமாம். ஐம்பால் என்பதற்கு ஐந்து தன்மை உடையது என்றும் உரைப்பர். அவையாவன - மணம், மது, மென்மை, நெய்ப்பு, கருமை என்பன. இப்பாடலுக்கு வேங்கை மலர்கள் கொடிச்சியர் கூந்தல் போல் மணம் வீசின, நாகம் நுளைச்சியர் ஐம்பால் போல் மணம் மிக்கன, முல்லை ஆய்ச்சியர் ஓதி போல நாறின. உற்பலம் உழத்தியர் கூந்தல் போல் மணம் வீசின எனவும் பொருள் கூறுவர். 48 |