இராமன் முகில் முதலியவற்றோடு புலம்பல் 4198. | காவியும், கருங் குவளையும், நெய்தலும், காயாம் - பூவையும் பொருவான் அவன், புலம்பினன் தளர்வான், 'ஆவியும் சிறிது உண்டு கொலாம்' என, அயர்ந்தான், தூவி அன்னம் அன்னாள் திறத்து, இவை இவை சொல்லும்: |
காவியும் கருங்குவளையும் - காவி மலரையும் கருங் குவளை மலரையும்; நெய்தலும் காயாம்பூவும் - நெய்தல் மலரையும் காயா மலரையும்; பொருவான் அவன் - (தன் உடல் நிறத்தால்) ஒத்தவனாகிய அந்த இராமன்; புலம்பினன் தளர்வான் - புலம்பித் தளர்ச்சி அடைபவனாய்; ஆவியும் சிறிது உண்டு கொலாம் என - (இவன் உடம்பில்) சிறிதேனும் உயிர் உள்ளதோ என ஐயுறுமாறு; அயர்ந்தான் - சோர்வுற்றவனாகி; தூவி அன்னம் அன்னாள் திறத்து - மெல்லிய சிறகுகளை உடைய அன்னம் போன்ற சீதை மாட்டு; இவை இவை சொல்லும் - (தான் கொண்ட காதல் மிகுதியால்) இந்த இந்தச் சொற்களைச் சொல் பவனானான். காவி, கருங்குவளை, நெய்தல், காயாம்பூ மலர்கள் இராமன் நிறத்திற்கு உவமை. பல பொருள் உவமை அணி. காவி, கருங்குவளை, நெய்தல் என்பன ஆகுபெயராய் அவற்றின் மலர்களை உணர்த்தின. 'கடலோ? மழையோ? முழுநீலக் கல்லோ? காயா நறும்போதோ? படர்பூங்குவளை நாள் மலரோ? நீலோற்பலமோ, பானலோ? (544), 'எள்இல் பூவையும், இந்திர நீலமும் அள்ளல் வேலையும், அம்புத சாலமும், விள்ளும் வீயுடைப் பானலும், மேவும் மெய் வள்ளல். (569) என்பன ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கன. தளர்ச்சியால் பேச்சு மூச்சற்றவனாய் இராமன் இறந்தவன் போலக் காணப்பட்டான் என்பதை 'ஆவியும் சிறிது உண்டு கொலாம் என அயர்ந்தான்' என்றார். கொல் - ஐயப் பொருளில் வந்தது. 'ஆகம் பூண்ட மெய் உயிரே நீ! அப்பொய் உயிர் போயே நின்ற ஆண்தகை' (5304) என்றதும் காண்க. அன்னம் நடையழகால் உவமை; சீதையின் பிரிவால் இராமன் அடையும் அவத்தைகளாகப் 'புலம்பல், தளர்தல், அயர்தல், மொழி பல கூறல் என்பன இங்கேகூறப்பட்டன. 51 |