கலிவிருத்தம்

4199. வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய், அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ?

     காரே - கார்மேகமே! வார் ஏர் முலையாளே - கச்சணிந்த அழகிய
கொங்கைகளை உடைய சீதையே; மறைக்குநர் - (கவர்ந்து சென்று)
ஒளித்துவைத்திருப்பவராகிய அரக்கர்கள்; வாழ் ஊரே அறியேன் -
வாழ்கின்ற ஊர் இன்ன இடத்தில் உள்ளது எனவும் அறியாதவனாய்;
உயிரோடு உழல்வேன் - உயிரைச் சுமந்து கொண்டு திரிந்து வருகிறேன்;
நீரே உடையாய் - நீ நீரையே கொண்டு இருக்கின்றாய். (நீர்மை
உடையையாய் உள்ளாய்); அருள் நின் இலையோ - (அங்ஙனமிருந்தும்)
அருள் உனக்கு என்னிடத்தில் இல்லையா? எனது ஆவி கலக்குதியோ -
எனது உயிரைக் கலங்கச் செய்வாயோ?

     அரக்கர்கள் வலிமை, படை, உருவம் முதலியவற்றை அறிய
முடியாததோடு, அவர்களது ஊரையே அறிய முடியவில்லையே என்ற வருத்தம்
புலனாக 'ஊரே அறியேன்' என்றான். ஊரே என்பதில் ஏகாரம்
இழிவுப்பொருளில் வந்தது.  அரக்கர்களைத் தண்டித்துச் சீதையை மீட்காது
வாளா உயிர்வாழ்தற்கு இரங்குவானாய் 'உயிரோடு உழல்வேன்' என்றான். நீர்
என்பது தண்ணீர் என்றும் நீர்மை (அருள்) என்றும் பொருள்படும்.
பெயர்க்கேற்ற பண்பு இல்லையேயெனக் கூறுவானாய் 'நீரே உடையாய்'
என்றான். சீதையின் பிரிவால் வருந்தும் தன்னை மேலும் இக்கார்காலம்
வருத்துவதால் 'அருள் நின் இலையோ? எனது ஆவி கலக்குதியோ' என
இராமன் கார் காலம் நோக்கி வினவினான்.

     இது முதல் ஏழு பாடல்கள் கலிவிருத்தம். அவ்விருத்தங்கள்
இரங்குதலைக் குறிக்கும் புலம்பல் சந்தம் பெற்றன. வருந்துபவர்கள் நீண்ட
வாக்கியங்களைப் பேசாமல் சிறுசிறு சொற்றொடராலேயே தம் வருத்தத்தை
தெரிவித்தல் இயல்பு என்பதை மனவியலாரும் ஒப்புவர். அதற்கு ஏற்பவே
சிறு சிறு தொடர்களால் அமைந்து உள்ளன இக்கலிவிருத்தங்கள், இச்சந்தம்,
பால காண்டத்தில் சீதை, இராமன் இரங்கற்கும் (1162 - 1181), சுந்தர
காண்டத்தில் சீதை இரங்குதற்கும் (5230 - 5236) வருதல் காண்க. 
நைடதத்திலும் நளன் - தமயந்தி இரங்கல் (1031, 1035, 1050, 1056) இதே
கலிவிருத்தத்தில் அமைதல்காண்க.                              52