4200. | 'வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு, எப் பாலும், விசும்பின் இருண்டு எழுவாய்; அப் பாதக வஞ்ச அரக்கரையே ஒப்பாய்; உயிர் கொண்டு அலது ஓவலையோ? |
வெப்ப ஆர் - கடுமை நிறைந்த; நெடு மின்னின் எயிற்றை - நீண்ட மின்னல்களாகிய பற்களை உடையாய்!வெகுண்டு - சினங்கொண்டு; விசும்பின் எப்பாலும் இருண்டு - ஆகாயத்தில் எல்லாப் பக்கத்திலும் கருநிறங் கொண்டு; எழுவாய் - தோன்றுகின்றாய்; அப் பாதக வஞ்ச அரக்கரையே ஒப்பாய் - (ஆதலால்) கொடுஞ்செயலை உடைய அந்த வஞ்சனை நிறைந்த அரக்கர்களையே நீ முற்றும் ஒத்து விளங்குகிறாய்; உயிர் கொண்டு அலது - எனது உயிரைக் கவர்ந்து கொண்டன்றி; ஓவலையோ - நீங்கமாட்டாயோ? நெடு மின்னலாகிய பற்களை உடையதாய் வானிடத்து இருண்டு இடியொலிசெய்து வெகுண்டு பரவிஎழுதல் நோக்கி மேகம் அரக்கர்க்கு ஒப்பாயிற்று. மின்னெயிறு உருவகம். இராமன் அஃறிணைப் பொருளாகிய காரொடு பேசியது வழுவமைதியின் பாற்படும். சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச், செய்யா மரபில் தொழிற்படுத்தடக்கியும் (தொல் பொருளி - 2), என்றதும் 'ஞாயிறு, திங்கள். . . . . . . சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கமையும் என்மனார் புலவர்' (தொல் - செய் - 200) என்றதும்காண்க. 53 |