4201.'அயில் ஏய் விழியார்,
      விளை ஆர் அமுதின்
குயில் ஏய் மொழியார்க்
     கொணரரய்; கொடியாய்!
துயிலேன் ஒருவேன் உயிர்
      சோர்வு உணர்வாய்;
மயிலே! எனை நீ
      வலி ஆடுதியோ?

     மயிலே - மயிலே! அயில் ஏய் விழியார் - வேலைப் போன்ற
கண்களை உடையவரும்; விளை ஆர் அமுதின் - பாற்கடலில் தோன்றிய
அரிய அமிழ்தினையும்; குயில் ஏய் மொழியார் - குயிலின் குரலையும்
போன்ற மொழியுடையவளுமான சீதையை; கொணராய் - தேடிக் கொண்டு
வந்து தரமாட்டாய்.  கொடியாய் - கொடுந் தன்மையுடையாய்!துயிலேன்
ஒருவேன் -
துயில் கொள்ளாதவனாய், தனித்திருப்பவனாகிய எனது; உயிர்
சோர்வு உணர்வாய் -
உயிர் தளர்ச்சி அடைதலை அறிவாய்; எனை நீ வலி
ஆடுதியோ -
 (அறிந்திருந்தும்) நீ உன் வலிமை காட்டி என்னை
வருத்துவாயோ?

     மயிலின் தோகையும் சாயலும் சீதையின் கூந்தலையும், சாயலையும்
நினைப் பூட்டியதால் இராமன் வருந்தினான்.  மயிலானது தனக்கு உதவி
செய்யா விடினும் வருத்துதலாகிய கொடுமையையாவது செய்யாது
தவிர்த்திருக்கலாம்.  மாறாக, அது சீதையைத் தேடித் தராததோடு
துன்பத்தையும் பெருக்கியதால் 'கொடியாய்' என்றான்.  விழியார், மொழியார்
என்பன உயர்த்தற்பொருளில் வந்த பன்மை.  அமிழ்தினையும் குயிலையும்
ஒத்த மொழி என்க.  குயில் ஆகுபெயராய்க் குரலை உணர்த்திற்று.
பிரிந்தார்க்கு உறக்கமின்மை இயல்பாகும். சீதையைப் பிரிந்திருக்கும்
தனிமையை 'ஒருவேன்' எனும் சொல் உணர்த்தும்.  ஒருவன் உயிர்
சோர்ந்திருக்கையில் வலிமை காட்டுதல் வீரம் அன்று ஆதலால் ''உயிர்
சோர்வு உணர்வாய், எனை நீ வலி ஆடுதியோ?' என வினவினான்.  வலி
ஆடுதல் - வன்மை காட்டி வருத்துதல்.                            54