4202.'மழை வாடையொடு ஆடி,
      வலிந்து, உயிர்மேல்,
நுழைவாய்; மலர்வாய் நொடியாய்
      - கொடியே! -
இழை வாள் நுதலாள்
      இடைபோல் இடையே
குழைவாய்; எனது
      ஆவி குழைக்குதியோ?

     கொடியே - கொடியே!மழை வாடையொடு ஆடி - மழைக் காலத்தில்
வீசுகின்ற வாடைக்காற்றிற்கு ஏற்ப அசைந்து; வலிந்து உயிர் மேல்
நுழைவாய் -
(அவற்றின் சேர்க்கையால்) வலிமை பெற்று என் உயிரில்
நுழைகின்றாய்; மலர்வாய் - (நான் வாடியிருக்க) நீ மலர் மலர்ந்து நிற்பாய்
(மலர்ச்சியுடன் இருப்பாய்); இழை வாள் நுதலாள் - சுட்டி அணிந்த ஒளி
பொருந்திய நெற்றியை உடைய சீதையின்; இடை போல இடையே
குழைவாய் -
இடைபோல இடைஇடையே துவண்டு காட்டி; எனது ஆவி
குழைக்குதியோ -
எனது உயிரை தளரச் செய்குவையோ?நெடியாய் -
சொல்வாய்.

     மழைக்காலத்தில் வீசிய வாடைக்காற்றோடு பழகி அதன் இயல்பைப்
பெற்று, மெல்லியதாய்துவண்டு சீதையின் இடையை நினைப்பூட்டி, உயிர்மேல்
நுழைந்து வருந்திய கொடியை நோக்கி இராமன் புலம்பினான்.  நொந்தவர்
உயிர்மேல் நுழைதலும், வருத்தமுற்றார் முன் மலர்தலும் கொடிக்கு இயல்பன்று.
எனினும் 'சான்றாண்மை தீயினம் சாரக்கெடும்' (நாலடி - 179) என்றபடி கொடி
வாடைக்காற்றோடு சேர்ந்து கொடிதாயிற்று என்பானாய் தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்' (நாலடி - 180) என்றபடி வாடைக் காற்றோடு சேர்ந்து
நல்லியல்பு இழந்ததால் இராமன் குணம் மாறிய கொடியைப் பழித்தான்.  பிறர்
துன்பம் கண்டு வருந்தாது முகமலர்தல் கொடியோர்க்கே இயல்பாகும்.  தன்
உயிரை வதைத்தும் மலர்ந்தும், அசைவால் சீதையை நினைப்பித்தும்
வருத்தியதால் 'குழைவாய் எனது ஆவி குழைக்குதியோ? என்றான்: குழைவாய்
குழைக்குதியோ - என்ற இடத்து ஒலி நயம் காண்க.  கொடியே என்ற விளி
'கொடுமையை உடையாய்' என்ற பொருளும் தோன்ற நின்றது.  சீதை
வருந்திக் கூறியதாகப் பின்னர் வரும் 5232 ஆம் பாடலை இங்கு நோக்குக. 55