4203. | 'விழையேன் விழைவானவை; மெய்ம்மையின் நின்று இழையேன், உணர்வு என்வயின் இன்மையினால்; பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால்; உழையே! அவர் எவ் உழையார்? உரையாய்! |
உழையே - மானே! விழைவானவை விழையேன் - விரும்பத் தக்க பொருள்களைக் கூட விரும்பேன்; மெய்ம்மையின் நின்று இழையேன் - உண்மையான நெறியினின்று சிறிதும் பிறழேன்; உணர்வு என் வயின் இன்மையினால் - (ஆயினும்) (நலந்தீங்குகளை) அறியும் அறிவு என்னிடம் இல்லாமல் போய்விட்டதனால்; பிழையேன் - நான் பிழை செய்தவன் ஆனேன்; உயிரோடு பிரிந்தனர் - என்னுடைய உயிரோடு சானகியாரும் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்; அவர் எவ் உழையார் - அவர் இப்பொழுது எங்கிருக்கிறார்? உரையாய் - உரைப்பாயாக. பொன்மானைச் சீதை பிடித்துத்தரக் கேட்டபோது, அம் மான் உண்மை மாான, மாயமாான என்று ஆராய்ந்து பார்க்கும் அறிவு இல்லாமல், இலக்குவன் 'மாயை இது' என்று கூறவும் கேட்காமல், அந்த மானைப் பின் தொடர்ந்து சென்றமையே, சீதை தன்னை விட்டுப் பிரிந்து செல்ல நேரிட்டது என நடந்த நிகழ்ச்சியை நினைந்து பார்த்து வருந்திப் பேசியதாகவும் முதல் மூன்றடிகள் உணர்த்தும். இராமன் பிழை புரிந்ததற்கு 'உணர்வு' இன்மையே காரணமாயிற்று. சீதை தன்னை விட்டுப் பிரிந்து, தன் உயிர், உடம்பை விட்டுப் பிரிந்தது போலும் என்பானாய் 'உயிரோடு பிரிந்தனர்' என்றான். 'ஈண்டு நீ இருந்தாய்' ஆண்டு அங்கு எவ் உயிர் விடும் இராமன்? 'பூண்ட மெய் உயிரே நீ' (5304) 'ஓருயிராக உணர்க உடன் கலந்தார்க்கு ஈருயிர் என்பார் இடை தெரியார்' (பு.வெ.மா.262) என்பன காண்க. உழை என்ற சொல் மான், இடம் என்ற இரு வேறு பொருளில் அமைந்த நயம் காண்க. மான் வடிவம் கொண்டவனால் சீதையைப் பிரிந்ததனால் மானையே சீதை உள்ள இடத்தைத் தேடித் தருமாறு இராமன் வேண்டினான் என்க. 56 |