4205.'ஒன்றைப் பகராய்,
      குழலுக்கு உடைவாய்;
வன்தைப்புறு நீள்
      வயிரத்தினையோ! -
கொன்றைக் கொடியாய்! -
      கொணர்கின்றிலையோ!
என்றைக்கு உறவு
      ஆக இருந்தனையோ?

     கொன்றைக் கொடியாய் - கொன்றை மரமாகிய கொடியவனே!
குழலுக்கு உடைவாய் - சீதையின் கூந்தலுக்கு நீ தோற்றாய்; வன்தைப்புறு
நீள் வயிரத்தினையோ
- அதனால் அவரிடம் மட்டுமன்றி என்னிடத்தும்
வலிய நன்கு பதியப் பெற்ற நீண்ட பகையை உடையாயோ?
கொணர்கின்றிலையோ - அவரை என்னிடம் கொண்டுவர இயலவில்லையோ?
ஒன்றைப் பகராய் - யாதொன்றும் விடை கூறுகின்றாயில்லை;
என்றைக்கு உறவாக இருந்தனையோ - நீ என்றைக்குத்தான்உறவாக
இருந்தாய்? (ஒரு நாளும் இல்லை).

     குழலுக்கு கொன்றைக்காய் கருநிறம் பற்றியும் நீட்சி பற்றியும் உவமை.
சீதையின் கூந்தலை நினைவுபடுத்தி வருத்தியதால் 'கொடியாய்'  என்றான்.
கொன்றை மரம் சீதையைத் தேடிக் கொணராமைக்குக் காரணம், அது
சீதையின் கூந்தலுக்குத் தோற்றமையால் கொண்ட பகைமையினால் என
இராமன் காரணம் கற்பித்துக் கூறுகிறான். இங்ஙனம் இராமன் சீதையைப்
பிரியாத காலத்தும் அவள் கூந்தலுக்கு தோற்றதால் பகைமை கொண்டும்,
சீதையைப் பிரிந்த காலத்து அவள்  கூந்தலை நினைப்பூட்டி இராமனை
வருத்தியும், எதற்கும் விடை கூறாதும் இருத்தலின் 'என்றைக்கு உறவாக
இருந்தனையோ?' என வினவினான். கொன்றை, மகளிர் சூடிக் கொள்ளும்
மலரன்று ஆதலின் 'நீ என்றைக்கு அவர் கூந்தலோடு உறவாக (தொடர்பு
கொண்டு) இருந்தனை எனக் கூறினான் என்க. கொன்றை என்னும் சொல்
'கொனறாய்' என்று பொருள்படுவதால் கொல்லும் இயல்புடையாய் என்பனாய்
'என்றைக்கு உறவாக இருந்தனையோ என்றான் எனவும் நயம்படக் கூறலாம்.
கொன்றை ஒன்றும் விடை கூறாது இருந்ததால், அதனை வன்மையும், வயிரமும்
உடையதாகக் கூறினான். நீள் வயிரம் - நெடுங் காலமாக உள்ள வயிரம், பல
நாளாக உள்ள பகைமை இயல்பாகவே வயிரம் பாய்ந்த மரத்திற்கு உறவின்மை
காரணமாக வயிரம் (பகைமை) உண்டானதாகக் கற்பித்தான். ஒன்றைப் பகராய்
என்பதற்கு 'ஒரு வார்த்தை பேசு' என்று கூறியதாகவும் பொருள் கொள்ளலாம்.
                                                             58