ஆசிரிய விருத்தம்

4206. 'குரா அரும்பு அனைய கூர் வாள்
      எயிற்று வெங் குருளை நாகம்
விராவு வெங் கடுவின் கொல்லும்
      மெல் இணர் முல்லை, வெய்தின்
உராவ அருந் துயரம் மூட்டி,
      ஓய்வு அற மலைவது ஒன்றோ?
இராவண கோபம் நிற்க,
      இந்திரகோபம் என்னோ?

     குரா அரும்பு அனைய - குராமரத்தின் அரும்பையொத்த; கூர் வாய்
எயிற்று
- கூர்மையான ஒளிபொருந்திய பற்களை உடைய; வெம் குருளை
நாகம்
- கொடிய பாம்பின் குட்டியிடத்து; விராவு வெங்கடுவின் கொல்லும் -
பொருந்திய கொடிய நஞ்சு போலக் கொல்லுகின்ற; மெல் இனர் முல்லை -
மெல்லிய கொத்துக்களாய் உள்ள முல்லை அரும்புகள்; வெய்தின் உராவரும்
துயரம் மூட்டி
- கொடிதாய் பொறுத்தற்கரிய துன்பத்தை வளர்த்து; ஓய்வு
அற மலைவது ஒன்றோ
- இடைவிடாமல் என்னை எதிர்த்துப் போரிடுவது
ஒன்று மட்டும் தானா? இராவணன் கோபம் நிற்க - இராவணனது கோபம்
ஒரு புறம் நிற்கையில்; இந்திர கோபம் என்னோ - இந்திர கோபமொன்று
என்னை வருத்தத் தொடங்கியது எதற்காகவோ?

     குரா மரத்தின் அரும்பு வெண்ணிறத்தானும் கூர்மையானும் பாம்பின்
பல்லுக்கு உவமையாயது. குருளை இளமைப் பெயர்: 'நாயே, பன்றி, புலி, முயல்
நான்கும், ஆயுங்காலைக் குருளை என்ப' (தொல் மரபி.8) என்ற நூற்பாவில்
'ஆயுங்காலை' என்றதனால் 'சிறு வெள்ளரவி்ன் அவ்வரிக் குருளை' என்பதுங்
கொள்க என்று உரை வகுத்தது காண்க. இளையதாயினும் பாம்பு கொலை
செய்வதில் வல்லது ஆதல்போல முல்லையும் அரும்பு நிலையிலேயே
வருத்தும் வன்மையுடையதாயிற்று என்பது புலப்படுத்தக் 'குருளைநாகம்'
என்றான். பாம்பு கூர்மையான, வலிய பற்களையுடையதாய்க் கொல்ல, முல்லை
அரும்பு மெல்லியதாய் நஞ்சு இல்லாமலேயே கொல்லவல்லது ஆதலின்
பாம்புக் குட்டியினும் முல்லை அரும்பு கொடிதாயிற்று வேற்றுமை அணி.

     இந்திரகோபம் என்பது இந்திரன் கோபம் என்றும் தம்பலப்பூச்சி என்றும்
பொருள்படும். கார்காலத்தில் இவை காணப்படும். இந்திரன் ஏவலால்
மழைபொழியும் காலத்தில் இவை மிகுதியாகக் காணப்படுதலின் 'இந்திரகோபம்'
என்னும் பெயர் பெற்றன. முல்லையும், தம்பலப்பூச்சியும் சீதையின்
பற்களையும், வாயிதழையும் நினைவுபடுத்தியதால் அவை தன்னை
வருத்தினவாக இராமன் உரைத்தான். பற்களுக்கு முல்லையும் வாய் இதழிற்குத்
தம்பலப்பூச்சியும் உவமை ஆயின. சீதையைக் கவர்ந்த இராவணன் தனக்குப்
பகைவனாகிவிட்டதால், தன் மீது இராவணன் கோபம் கொள்வது
இயற்கையாகிறது. மேலும் சூர்ப்பணகையின் மூக்கறுப்பு நிகழ்ச்சி, இராவணன்
சினமாக வளர, அதன் காரணத்தால் சீதையைப் பிரிய நேரிட்டது என
உணர்ந்தவனாய் இராவணன் கோபமே சீதையின் பிரிவிற்குக் காரணமாயிற்று
என்றான், அதனால் முல்லையும், தம்பலப்பூச்சியும் தன்னை வருத்துவதற்கு
இராவணன் கோபமே காரணம் என்பானாய் 'இராவண கோபம் நிற்க'
என்றான். இராவணன் கோபத்தால் தான் வருந்திக் கொண்டிருக்க,
(இந்திரகோபமும்) தம்பலப்பூச்சிகளும் சீதையின் இதழ்களை நினைவூட்டி
வருத்தும் நிலை எதற்காக என மயங்கினான். இராவணன் அரக்கன் ஆதலில்
வருத்துதல் இயல்பு ஆனால், தன் மாட்டு நட்புக் கொண்ட இந்திரன் கோபம்
கொண்டு வருத்துவது ஏற்புடைய செயல் தானோ என்றும் பொருள் கொள்ள
வைத்த நயம்பாராட்டத்தக்கதாம்.                                 59