4208. | 'அருவினை அரக்கர் என்ன, அந்தரம் அதனில் யாரும் வெருவர, முழங்குகின்ற மேகமே! மின்னுகின்றாய்; ''தருவல்'' என்று இரங்கினாயோ? தாமரை மறந்த தையல் உருவினைக் காட்டிக் காட்டி, ஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்! |
அருவினை அரக்கர் என்ன - பொறுத்தற்கரிய தீய செயல்களைச் செய்யும் அரக்கர்களைப் போல; அந்தரம் அதனில் - ஆகாயத்தில்; யாவரும் வெருவர - எல்லோரும் அஞ்சுமாறு; முழங்குகின்ற மேகமே - ஆரவாரிக்கின்ற மேகமே! மின்னுகின்றாய் - (சீதையின் வடிவம் காட்டி) ஒளிவிடுகின்றாய்; தருவல் என்ற இரங்கினாயோ - 'அவளை அளிப்பேன்' என்று என்மாட்டு இரக்கம் காட்டினாயா; தாமரை மறந்த தையல் - தாமரை மலரை மறந்தவளாய் (மிதிலையில் பிறந்த) சீதையின்; உருவினைக் காட்டிக் காட்டி - வடிவத்தைக் காட்டிக் காட்டி; ஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாய் - மறைக்கின்றாய், மறைக்கின்றாய். பிறரால் தடுக்க முடியாத கொடிய செயல் செய்பவராதலின் அரக்கரை 'அருவினை அரக்கர்' என்றான். நிறத்தாலும் முழக்கத்தாலும் மேகத்திற்கு அரக்கர் ஒப்பாயினர். 'பகுவாய் முழை திறந்து, ஓர் வார்த்தை உரை செய்தனள். இடிக்கும் மழை அன்னாள்' (371), 'எப்பாலும் விசும்பின் இருண்டு எழுவாய்; அப்பாதக வஞ்ச அரக்கரையே ஒப்பாய்' (4200) என முன்வந்த பாடற்பகுதிகள் ஒப்பு நோக்கத்தக்கன. சீதை திருமகளே ஆதலின் 'தாமரை மறந்த தையல்' என்றான். சீதையைத் திருமகளாகப் 'போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள். (1151); 'அவ் அல்லி மலர் புல்லும மங்கை இவளாம்' (1148); 'மையறு மலரின் நீங்கி, யான் செய் மாதவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்' (480) 'ஐயன் அயோத்தியில் பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்' (1824) அமிழ்மின் வந்த செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் (7684) என்ற இடங்களிலும் இக்கருத்தைக் குறிப்பிடுதல் காண்க. பெரும்பாலும் மகளிர் இடைக்கு மின்னலை உவமை கூறுவர், இப்பாடலில் சீதைக்கே மின்னலை உவமையாக்கினார். 'சதகோடி மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள்' (510) என முன்னரும் கூறியது காண்க. தருவல் என்று இரங்கினாயோ என்றதற்கு (முழக்கத்தால் அரக்கர் போல் இருப்பினும்) சீதையின் உருவத்தைக் காட்டலால் தன்பால் இரக்கம் காட்டுவதாகக் கொண்டு என்னிடத்து இரக்கம் காடடினாயோ' எனவும் கொள்ளலாம். காட்டிக் காட்டி, ஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாய் - என்ற அடுக்குகளில் அவலச்சுவை மிகுவதுகாண்க. 61. |