4209. | 'உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட, உலைவேன் உள்ளம் புண் உற, வாளி தூர்த்தல் பழுது, இனி; போதி; - மார! - எண் உறு கல்வி உள்ளத்து இளையவன், இன்னே, உன்னைக் கண்ணுறும்ஆயின், பின்னை, யார், அவன் சீற்றம் காப்பார்? |
மார - மன்மதனே!உள் நிறைந்து - உள்ளிடம் எல்லாம் நிரம்பி; உயிர்க்கும் வெம்மை - (அங்கு இடமின்றி) வெளிப்படும் (பிரிவால் நிகழ்ந்த) வெப்பம்; உயிர் சுட - என் உயிரை எரிக்க; உள்ளம் உலை வேன் - மனம் வருந்திக் கொண்டிருக்கிறேன்; இனி - இனிமேலும்; புண் உற வாளி தூர்த்தல் - புண்படுமாறு உன் மலரம்பெய்தி அழித்தல்; பழுது - பயனற்ற செயலாகும்; போதி- (ஆதலால்) நீ என்னை விட்டுப் போவாயாக; எண் உறு கல்வி உள்ளத்து - மதிக்கத்தக்க கல்வி பயின்ற மனத்தை உடைய; இளையவன் - என் தம்பி இலக்குவன்; இன்னே உன்னைக்கண்ணுறும் ஆயின் - இப்பொழுதே உன்னைக் காண்பானாயின்; பின்னை - பின்பு; அவன் சீற்றம் காப்பார் யார் - அவன் கோபத்திற்கு எதிரே நிற்பவர் யாருளர்? பிரிவாற்றாமையாகிய வெம்மையே தன் உயிரைச் சுடுதற்குப் போதுமாதலின், மன்மதனின் மலரம்பு மிகையாகும். தேவையில்லை என்பானாய் 'வாளி தூர்த்தல் பழுது' என்றான். ஏற்கனவே பிரிவுத் துன்பத்தால் உயிர் வாட, மேலும் அம்புகளைச் செலுத்தி வருத்துதல் (போர்நெறிக்குக்) குற்றமாகும் (பழுது) என்றும் பொருள் கொள்ளலாம். தூர்த்தல் என்றமையால் அம்புகளின் மிகுதி புலப்படும். எண்ணுறுகல்வி - புலன் ஐந்தையும் வெல்லும் ஞான நூல் தெளிவைக் குறித்தது. இலக்குவன் பார்த்துச் சினம் கொள்வதற்கு முன்னர் அம்புகள் எய்வதை நிறுத்தி விட்டுச் செல்லுமாறு மன்மதனை இராமன் எச்சரித்தான். அவன் பார்த்து விட்டால், எழக் கூடிய கோபத்தைத் தணிப்பவர் எவரும் இல்லை' என்றனன் இலக்குவனின் அறிவுச் சிறப்பை 'இயைந்த நீதி, வளையா வரும் நல்நெறி நின் அறிவு ஆகும் அன்றே' (1730) என்று இராமனும் ''மேதா! இளையோய்'' (8689) எனச் சீதையும் குறித்தமை காண்க. குகனைக் கண்டதும் 'உள்ளம் தூயவன், தாயின் நல்லான்' (1964) என மதிப்பிடும் நுட்பமும், மாரீசன் மானாக வந்தபோது அது பொய்ம்மானென அறிந்து கூறிய மதி நுட்பமும் அவனிடம் இருந்தன. இலக்குவன் சீற்றம் தணித்தற்கரியது. 'மூட்டாத காலக் கடைத்தீ என முண்டு எழுந்தான்' (1716), 'அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்' (1717) என்ற அடிகள் அவன் சினக்கோலத்தை உணர்த்தும். சூர்ப்பணகை மூக்கறுக்கறுப்பட்டது அவன் சினத்தின் விளைவே, ''வான் என்பது என்? வையகம் என்பது என்?. . . . கோன் என்பது ஏன்? - எம்பி கொதித்திடு மேல்'' (7804) என்ற இராமன் கூற்றையும் காண்க. இராமன் கூறியாங்கு வாடைக்காற்று நீங்கிவிடின், பழுதான செயல் செய்யாது தப்புவதுடன் இலக்குவன் சீற்றத்தினின்றும் பிழைக்கலாம் என்று உணர்த்தினான். ''உளைவன இயற்றல்; ஒல்லை உன்னிலை உணருமாகில், இளையவன் முனியும், நங்கை 'ஏகுதி விரைவில்' (2798) எனச் சூர்ப்பணகையை நோக்கி இராமன் கூறியமையும் ஈண்டு நினைவு கூரலாம். இலக்குவன் அறிவுத் திறத்தையும் வீரத்தையும் இராமன் புகழ்ந்ததை இப்பாடலில்காண்கிறோம். 62 |