4210.'வில்லும், வெங் கணையும், வீரர்,
     வெஞ் சமத்து அஞ்சினார்மேல்
புல்லுந அல்ல; ஆற்றல் போற்றலர்க்
      குறித்தல் போலாம்;  -
அல்லும் நன் பகலும் நீங்கா
      அனங்க! நீ அருளின் தீர்ந்தாய்;
''செல்லும்'' என்று, எளிவந்தோர்மேல்,
      செலுத்தலும் சீர்மைத்து ஆமோ?'

     வீரர் வில்லும் வெங்கணையும் - வீரர்களின் வில்லும் கொடிய
அம்பும்; வெஞ்சமத்து அஞ்சினார்மேல் - கொடிய போரில் அஞ்சிய வர்கள்
மேல்; புல்லுந அல்ல - பாயத்தக்கன அல்ல,  ஆற்றல் போற் றலர் - தம்
வலிமையை மதியாதவர்களையே; குறித்தல் போலாம் - குறியாகக் கொண்டு
எய்வதற்கு உரியவை போலும்!அல்லும் நன்பக லும் நீங்கா அனங்க! -
(அங்ஙனமிருக்க) இரவும்  பகலும் என்னை விட்டு நீங்காத மன்மதனே! நீ
அருளின் தீர்ந்தாய் -
நீ உன் அருட் குணத்திலிருந்தும் நீங்கினாய்.
'செல்லும்' என்று -
(நமது வலிமை) இவ்விடத்துப் பலிக்கும் என்று கருதி;
எளிவந்தோர்மேல் செலுத்துதலும் -
எளியவர்மீது செலுத்தி வருத்துதலும்;
சீர்மைத்து ஆமோ -
சிறப்பிற்குரிய செயல் ஆகுமா?

     முன் பாடலில் 'போதி மார' என வேண்டியும் தன்னை விட்டு நீங்காத
மன்மதனை நோக்கி 'எளியார்மீது போர் செய்தல் சரியன்று, வீரத்தை
மதியாதவர்மீது படைக்கல்ம் செலுத்துதல் முறை; அங்ஙனமிருக்க எளிய
என் மீது உன் வீரம் காட்டுதல் தகுதியோ?' எனப் பழித்துப் பேசினான்.
'அழிகுநர் புறக்கொடை அயில் வாளோச்சாக் கழிதறுகண்மை' என்பது தழிஞ்சி
என்னும் புறப்பொருள் துறையாகும். (பு வெ.மா.55) இராவணன் மெலிவு கண்டு
'இன்று போய்ப் போர்க்கு நாளை வா' (7271) என்ற இராமன் வீரம் காண்க.
பகைவர் மெலிவு நோக்கி, அவர்கள் மேல் போர் தொடுக்காதிருத்தல்
போராண்மை எனப்படும். அருளால் வருவது ஆதலின் அதனை இழந்த
மன்மதனை 'அருளின் தீர்ந்தாய்' என்றான் 'செல்லும்' என்ற காரணத்தால்
அம்புகள் தொடுத்து வருத்துதல் புகழ்க்குரிய செயலன்று ஆதலின் 'சீர்
மைத்து ஆமோ?' எனப் பழித்தான். இரவுப் போதினும் பகற்காலத்தில்
பிரிவுத் துன்பம் குறைதல் நோக்கி 'நன்பகல்' என்றான் எனலாம். 
'காலைக்குச் செய்த நன்று என் கொல் எவன்கொல் யான், மாலைக்குச்
செய்த பகை' என்பது குறள் (1225).  செல்லுதல் - பலித்தல். உன்
சாமர்த்தியம் இங்குச் செல்லாது' என்று பொருள்படும். சிவபிரான் சீற்றத்தால்
மன்மதன் உடம்பு எரிந்து விட்டமை பற்றி அவனுக்கு இப்பெயர்
ஏற்பட்டது.                                                63