கலிவிருத்தம்

4212. ' ''காலம் நீளிது, காரும் மாரியும்
     வந்தது'' என்ற கவற்சியோ?
நீலமேனி அரக்கர் வீரம்
      நினைந்து அழுங்கிய நீர்மையோ?
வாலி சேனை மடந்தை வைகு இடம்
      நாட வாரல் இலாமையோ?
சாலும் நூல் உணர் கேள்வி வீர! -
      தளர்ந்தது என்னை? - தவத்தினோய்!

     சாலும் நூல் உணர் கேள்வி வீர - மிகுதியான நூல்களைக் கற்று
உணர்ந்த அறிவையும் கேட்டு அறிந்த அறிவையும் உடைய வீரனே!
தவத்தினோர் -
தவ ஒழுக்கத்தை மேற்கொண்டவனே!  கார் காலமும்
நிளிது -
'கார்காலம் நீண்ட காலத்தினதாய் உள்ளது; மாரியும் வந்தது -
மழையும் வந்துவிட்டது'; என்ற கவற்சியோ -  என்ற கவலைதானோ?
நீலமேனி அரக்கர் வீரம் நினைந்து -
கருநிற மேனியராய அரக்கர்களின்
வீரத்தை நினைத்து; அழுங்கிய நீர்மையோ - (அவர்களை வெல்ல
இயலாதோ என) வருந்திய தன்மை தானோ? மடந்தை வைகு இடம் நாட -
சீதை உள்ள இடத்தைத் தேடுவதற்கு; வாலி சேனை வாரல் இலாமையோ -
வாலியின் சேனை இன்னும் வரவில்லை என் பதனாலோ?தளர்ந்தது என்னை
-
நீ மனம் தளர்ச்சி அடைந்ததற்குக் காரணம் யாது?

     நூலறிவும், கேள்வியறிவும், வீரமும், தவ ஒழுக்கமும் மிக்க இராமன்
தளர்ச்சியடைதல் பொருந்தாது என்பானாய்ச் 'சாலும் நூல் உணர் கேள்வி வீர
தளர்ந்தது என்னை தவத்தினோய்' என்றான்.  இராமன் தளர்ச்சிக்குக் காரணம்
எதுவெனக் கேட்பான் போல அவனைத் தேற்றினான்.  சுக்கிரீவனுக்குப்
பட்டம் கட்டிய இலக்குவனே இப்பொழுது சுக்கிரீவன் படை என்று கூறாமல்
வாலி சேனை என்று கூறுவது சுக்கிரீவனை எந்த அளவிற்கு இலக்குவன்
ஏற்றுக் கொள்கிறான் என்பதற்குச் சான்றாகும்.                        65