4213. மறை துளங்கினும், மதி துளங்கினும்,
      வானும் ஆழ் கடல் வையமும்
நிறை துளங்கினும், நிலை துளங்குறு
      நிலைமை நின்வயின் நிற்குமே?
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு
      உடைய பேதையர் பெருமை, நின்
இறை துளங்குறு புருவ வெஞ் சிலை
      இடை துளங்குற, இசையுமோ?

     மறை துளங்கினும் - வேதங்களே பிறழ்ந்தாலும்; மதி துளங்கினும் -
சந்திரன் நிலைமாறினாலும்; வானும் ஆழ்கடல் வையமும் -
ஆகாயமும், ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட பூமியும்; நிறை துளங்கினும் -
தத்தம் நிலையில் மாறுபடினும்; நிலை துளங்குறு நிலைமை - இயல்பான
பெருமை நிலையினின்று மாறுபடும் தன்மை; நின் வயின் நிற்குமோ -
நின்னிடத்து நிற்கத் தகுந்ததோ? (அன்று என்றபடி).பிறை துளங்குவ
அனைய -
பிளைகள் விளங்குவன போன்ற; பேர் எயிறு உடைய - பெரிய
பற்களை உடைய; பேதையர் பெருமை - அறிவில்லாத அரக்கர்களுடைய
படைவலிப் பெருமையெல்லாம்; நின் இறை துளங்குறு - உன்னுடைய,
தலைமை பெற்று விளங்குகின்ற; புருவ வெஞ்சிலை - புருவங்களாகிய
கொடிய வில்; இடை துளங்குற - நடுவே சிறிது அசைந்த அளவில்;
இசையுமோ -
நிற்கக் கூடியனவோ? (நிற்கமாட்டா என்பதாம்)

     இயற்கையில் நிகழாதன நிகழினும் நிலைகுலையாத பெருமையுடையவன்
இராமன் என்பதை உணர்த்தவே 'நிலை துளங்குறு நிலைமை நின்வயின்
நிற்குமோ' என்றான். 'வேலை கரையிழந்தால் வேத நெறி பிறழ்ந்தால் ஞால
முழுதும் நடு விழந்தால்' (நளவெண்பா 222), வானந்துளங்கிலென், மண்
கம்பமாகிலென் '(மூவர் தேவா - தனித்திருவிருத்தம் - 8), பாஅல் புளிப்பினும்
பகல் இருளினும், நாஅல்  வேத நெறிதிரியினும் திரியாச் சுற்ற மொடு' (புறம் -
2) என்பன ஒப்பு நோக்கத்தக்கன.  சந்திரன் தடுமாறலாவது - திசைமாறி
உதித்தல், தண்மையன்றி வெம்மையை அளித்தலாம், சந்திரனைக் கூறியதால்
இனம் பற்றி ஞாயிறு முதலிய கோள்கள் துளங்குதலும் இங்குக் கொள்ளப்படும்.
ஆகாயம் நிறை துளங்கலாவது - ஏனைய பூதங்கட்கு இடம் கொடுத்தலும்,
ஒலியைத்தன் குணமாகவுடைமையும் இல்லாமல் கெடுதலாம்.  வையம்
துளங்கலாவது - வன்மைப் பொருட்கு இடமாதலும், மணத்தை இயல்பாக
உடைமையும் தவிர்தலாம்.  வானத்தையும் வையத்தையும் கூறியதால் மற்றை
மூன்று பூதங்களையும் உட்கொண்டு அவற்றின் பிறழ்ச்சியையும் கொள்க.

     இராமன் பெருமை, வல்லமை இவற்றை அறியாது தீங்கிழைக்க
வந்தவராதலின் அரக்கரைப் பேதையர் என்றான்.  அரக்கர் பெருமையெலாம்
அழிய இராமன் தன் புருவமாகிய வில்லைச் சிறிது நெரித்தால்' போதுமானது
என்பானாய்ப் 'புருவ மென்சிலை இடை துளங்குற இசையுமோ?' என்றான்.
புருவமென்சிலை - உருவகம்.  'துளங்கினும்' என்றவற்றிலுள்ள உம்மைகள்
எண்ணுப் பொருளொடு, துளங்கா என எதிர்மறைப் பொருளையும்சுட்டும். 66