4214. | 'அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்; அறிஞ! அங்கதன் ஆதியோர் எனையர் என்பது ஓர் இறுதிகண்டிலம்; எழுபது என்று எணும் இயல்பினார்; வினையின் வெந் துயர் விரவு திங்களும், விரைவு சென்றன, எளிதின்; நின் தனு எனும் திரு நுதலி வந்தனள்; சரதம்; வன் துயர் தவிர்தியே! |
அறிஞ - அறிவில் சிறந்தவனே!அனுமன் என்பவன் - அனுமன் என்பவனுடைய; அளவு அறிந்தனம் - (அறிவு, வலிமை, பெரிய வடிவம் கொள்ளும் திறன் முதலிய) பல்வேறு திறன்களின் அளவைத் தெரிந்து கொண்டோம்; அங்கதன் ஆதியோர் - அங்கதன் முதலோராகிய; எழுபது என்று எணும் இயல்பினர் - எழுபது வெள்ளம் என்று எண்ணப்படும் தன்மையரான வானர வீரர்கள்; எனையர் என்பது ஓர் இறுதி கண்டிலம் - வலிமையில் எத்தன்மையர் எனக் கூறத்தக்க ஒரு வரையறையை இன்னும் கண்டோம் இல்லை.வினையின் - தீவினை யைப் போல; வெந்துயர் விரவு திங்களும் - கொடிய துன்பம் தரும் (கார்கால) மாதங்களும்; விரைவு சென்றன - விரைவாகக் கழிந்தன. நின் தனு எனும் திரு நுதலி - (இனி) உன்னுடைய வில்லென்று சொல்லத்தக்க அழகிய புருவங்களை உடைய சீதை; எளிதின் வந்தனள் - எளிதாக வந்து சேர்ந்தவளாவள்; சரதம் - (இது) உறுதி; வன் துயர் தவிர்தி-கொடிய துன்பம் நீங்கப் பெறுவாயாக. அனுமனோடு முன்னரே புரிந்த உரையாடல்களாலும், அவன் எடுத்த பேருருவாலும், வாலி அவனைப் பற்றிக்கூறிய சொற்களாலும் அவனது திறமையை அறிந்திருந்தனர். ஆதலின் 'அளவு அறிந்தனம்' என்றான். அங்கதனையும் அனுமனுடன் சேர்த்துக் கூற அவன் செயல்கள் ஒன்றையும் அறியாவிடினும் வாலிசேய் என்ற ஒன்றே போதும் என்று இலக்குவன் நினைத்தான். இச்சேனைகளின் வலிமையை எவ்வாறு இலக்குவன் எடை போட்டான் என்ற வினாவிற்கு விடை கூறுபவன் போல வாலி சேனை என்று முன்னரே இலக்குவன் கூறிவிட்டான். சேனை, அனுமன், அங்கதன் ஆகிய மூவரையும் குறிப்பிட்ட இலக்குவன் இவர்கள் தலைவனாகிய சுக்கிரீவனை இங்கும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எழுபது என்பது ஆகுபெயராய் எழுபது வெள்ளத்தை உணர்த்தியது. காலம் நீளிது என இராமன் வருந்துவானோ என எண்ணி 'வினையின் வெந்துயர் விரவு திங்களும் விரைவு சென்றன' என ஆறுதல் கூறினான். தனு - வில், வளைவுபற்றி நுதலுக்கு வில் உவமையாயது. இராமனே அறிவில் சிறந்தவனாதலின், 'அறிஞ' என விளித்தான். ஏ - ஈற்றசை. 67 |