4215.'மறை அறிந்தவர் வரவு கண்டு, ''உமை
      வலியும் வஞ்சகர் வழியொடும்
குறைய வென்று, இடர்களைவென்'' என்றனை;
      குறை முடிந்தது விதியினால்;
இறைவ! அங்கு அவர் இறுதி கண்டு,
      இனிது இசை புனைந்து, இமையவர்கள்தாம்,
உறையும் உம்பரும் உதவி நின்றருள்;
      உணர்வு அழிந்திடல் உறுதியோ!

     இறைவ - தலைவனே!மறை அறிந்தவர் வரவு கண்டு - (முன்பு)
வேதங்களை உணர்ந்தவர்களாகிய (தண்டகாரணிய) முனிவர்கள் நின்னிடம்
வந்து சரண் அடைந்ததை உணர்ந்து; உமை வலியும் வஞ்சகர் வழியொடும்
-
(அவர்களிடம்) ''உங்களை வலிய வருத்துகின்ற வஞ்சனையுடைய
அரக்கர்களைச் சந்ததியோடும்; குறைய வென்று - அழியும்படி வென்று;
இடர்  களைவென  என்றனை   -  
உங்கள்   துன்பங்களை
நீக்குவேன் என்று வாக்களித்தாய். விதியினால் குறை முடிந்தது -
(அதற்கேற்ப) நல்ல ஊழ்வயத்தால் அந்தக் குறை முடிந்துவிட்டது.  அங்கு
அவர் இறுதி கண்டு -
(ஆதலால்) இனி அரக்கர்கள் வாழும் இடத்திலேயே
அவர்களுக்கு அழிவைச் செய்து; இனிது இசை புனைந்து - இனிதாகப்
புகழைச் சூடிக்கொண்டு; இமையவர்கள் தாம் உறையும் உம் பரும் -
தேவர்களுக்கு அவர்கள் தங்கும் இடமாகிய விண்ணுல கத்தை; உதவிநின்று
அருள் -
மீட்டுத்தந்து அருள்க; உணர்வு அழிந்திடல் உறுதியோ - (அது
செய்யாது) மனந்தளர்வது தக்க செயலாகுமா?

     மறை அறிந்தவர் - தண்டக வனத்து முனிவர்கள்; அவர்களுக்கு
இராமன் அபயம் அளித்ததைத் 'தகவுஇல் துன்பம் தவிருதிர் நீர்' (2647), ''ஆர்
அறத்தினொடு அன்றி நின்றார் அவர் வேர் அறுப்பென்'', வெருவன்மின் நீர்''
(2652) என்ற அடிகளால் அறியலாம்.  தனக்குத் தீங்கு செய்யாத அரக்கர்களை
அழிப்பதற்கு ஒரு காரணமாகச் சீதையைக் கவர்ந்தமை கிடைத்துவிட்டது
என்பதால் 'குறை முடிந்தது விதியினால்' என்றான்.  சீதை பொருட்டுச்
செய்யும் போரால் மாமுனிவர் குறை தீர்த்தலும் தேவர் குறை தீர்த்தலும்
நிறைவேறிவிடும் என உணர்த்தினான்.  புகழ் தரும் செயல்  செய்வதை
விடுத்துத் தேவியைப் பிரிந்த துன்பத்தால் தளர்வது தகாது என
உணர்த்தினான்.                                                68