4216. | 'காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ? வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று; பேதமை ஆம்அரோ; பொது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள் அன்று; நின்று புணர்த்தியேல், யாது உனக்கு இயலாதது? எந்தை! வருந்தல்' என்ன இயம்பினான். |
எந்தை - எம் தந்தை போன்றவனே!காது கொற்றம் - பகை வரைக் கொல்லுதலால் வரும் வெற்றி; நினக்கு அலாது - (அற வழியிற் செல்லும்) உனக்குக் கிடைப்பதல்லால்; பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ - (அவ்அறத்திற்கு மாறுபட்ட) அயலார்க்கு (அரக்கர்களுக்கு) எவ்வாறு கிட்டும்? வேதனைக்கு இடம் ஆதல் - வருந்துதற்கு இடம் தந்து மனமழிவது; வீரதை அன்று - வீரத்தன்மையாகாது.பேதமை ஆம் அரோ - (அஃது) அறியாமையின் பாற்படும் அல்லவா?போது பிற் படல் உண்டு - (எடுத்த காரியம்) காலங்காரணமாகப் பிற்படுதலும் இயல்பு; இது ஓர் பொருள் அன்று - உனக்கு இது ஒரு பொருட்டன்று. நின்று புணர்த்தியேல் - இப்பொழுதே முனைந்து நின்று முயற்சி செய்வாயாயின்; யாது உனக்கு இயலாதது - உன்னால் செய்ய இயலாதது யாது இருக்கின்றது?வருந்தல் என்ன இயம்பினான் - (ஆதலால்) வருந்த வேண்டாம்' என்று சொன்னான். தமையன் தந்தைக்கு நிகர் ஆதலின் 'எந்தை' என் விளித்தான். 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்பது நியதி ஆதலின் இராமன் வெற்றிபெறல் உறுதி என்பதைக் 'கொற்றம்' நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ?' என்றான். வீரதை - வீரம்; போது பிற்படல் - காலத்தாழ்வுநேரல். 69 |