கலி விருத்தம் 4218. | நிறைந்தன நெடுங் குளம்; நெருங்கின தரங்கம்; குறைந்தன கருங் குயில்; குளிர்ந்த உயர் குன்றம்; மறைந்தன தடந் திசை; வருந்தினர் பிரிந்தார்; உறைந்தன, மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி. |
நெடுங்குளம் நிறைந்தன - பெரிய குளங்கள் நீர் நிரம்பப்பெற்றன; தரங்கம் நெருங்கின - (அக்குளங்களில்) அலைகள் (ஒன்றன் மேலொன்றாய்) நெருங்கி எழுந்தன; கருங்குயில் குறைந்தன - கரிய நிறமுள்ள குயில்களும் கூவுதல் ஒழிந்தன; உயர் குன்றம் குளிர்ந்த - உயர்ந்த குன்றுகள் குளிர்ச்சி அடைந்தன; தடந்திசை மறைந்தன - பெரிய திசைகள் (கரு மேகங்களால்) மறைப்புண்டன; பிரிந்தார் வருந்தினர் - தத்தம் துணையைப் பிரிந்தவர்கள் மனம் வருந்தினார்கள்; மகன்றிலுடன் அன்றில் - (பிரியா இயல்பினவாகிய) மகன்றில் பறவைகளும் அன்றில் பறவைகளும்; உயிர் ஒன்றி உறைந்தன - (புறத்தே செல்லாமல்) தத்தம் உயிர். போன்ற பெடைகளைத் தழுவி நின்றன. கார்கால மழையால் வேனில் வெப்பம் குறைந்து நீரோடு காணப்பட்ட குளங்கள் கூதிர்கால மழையால் நிரம்பப் பெற்றன. அலைகள் நெருங்கி எழும் அளவில் குளங்கள் நீரால் நிறைந்தன எனக்கூறி, மழை மிகுதியை உணர்த்தினார். மாரிக்காலக் கடுமையால் குயில்களின் ஒலி குறைந்தன என்பதற்குப் 'பேசாது அடங்கின குயில்கள்' கூய ஆய் குரல் குறைந்த போல் குறைந்தன குயில்கள் (4193) எனும் அடிகள் ஒப்பு நோக்கத்தக்கன. மழை மிகுதியால் குன்றுகளும் குளிர்ச்சி பெற்றதைக் 'குளிர்ந்த உயர்குன்றம் என்றார். 'குன்று குளிர்ப்பன்ன கூதிர்' (நெடுநல்வாடை - 12) என்றது காண்க. மேகத்தின் அடர்த்தியால் கதிரவன் தோன்றாது இருள்படர்வதால் திசைகள் தெளிவாகக் காணப்படாது போதலின் 'மறைந்த நெடுந்திசை' என்றார். துணையைப் பிரிந்தவர் கூதிர் கால மழையால் வருந்துவதைக் 'காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல் கனைந்து, கூதிர் நின்றன்றாற்போதே' (நெடுநல் - 71) என்ற அடிகளும் உணர்த்தும். மகன்றில் என்பது நீர் வாழ் பறவை; அன்றில் என்பது பனைமரத்து வாழும் பறவை. இவ்விரண்டும் தம் பெடையைவிட்டுப் பிரியாமல் வாழும் இயல்புடையன. மழைக்காலத்தில் பிரிவுக்கஞ்சி இவை தத்தம் பெடையை நன்றாகத் தழுவிக் கொள்ளும் இயல்பின என்பதால் 'உயிர் ஒன்றி உறைந்தன' என்றார். உயிர் - உயிர் போன்ற பேடைகளை; ஒன்றி என்றது உடம்பு ஒன்று என எண்ணுமாறு தழுவி நிற்றலைக் குறிக்கும். 'பூவிடைப் படினும் யாண்டு கழித்தன்ன, நீருறை மகன்றில் புணர்ச்சி போல' (குறுந் - 57); 'குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைத் காதலோரே' (ஐங்குறு - 381); மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி' (பரி பாடல் - 8.44) என்பன மகன்றில் பறவையின் இயல்பையும் 'நெருப்பினன்ன செந்தலை அன்றில், இறவினன்ன கொடுவாய்ப் பெடையோடு, தடவினோங்கு சினைக் காட்சியில் பிரிந்தோர், கையற நரலும்' (குறுந் - 160) என்ற அடிகள் அன்றிலின் பிரியா இயல்பையும் உணர்த்துவன. மழைக்காலத்தின் இயல்பைக் கூறுவதால் இப்பாடல் தன்மை நவிற்சி அணி. 71 |