4220. | வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும் சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின் காலம் அறிவுற்று உணர்தல், கன்னல் அளவு அல்லால், மாலை பகல் உற்றது என, ஓர்வு அரிது மாதோ! |
வேலை நிறைவுற்றன - கடல்கள் நீர் நிரம்பப் பெற்றன; வெயில் கதிர்- கதிரவனின் கதிர்கள்; வெதுப்பும் சீலம் அழிவுற்ற - வெம்மையால் எரிக்கும் தம் இயல்பை இழந்து மறைந்தன.புனல் உற்று உருவு செப்பின் - (சிறு துளை வழியாக) நீர் நிரம்பி நேரங்காட்டும் நாழிகை வட்டிலைக் கொண்டு; கன்னல் அளவு - நாழிகையின் அளவைக் கண்டு; காலம் அறிவுற்று உணர்தல் அல்லால் - காலம் இன்னதென்று அறிய முயன்று தெரிந்து கொள்வதன்றி; மாலை பகல் உற்றது என - மாலைப்போதும் காலைப் போதும் வந்தன என்று; ஓர்வு அரிது - அறிதல் அரிதாயிற்று. மேகங்களிடை ஞாயிறு மறைப்புண்டதால் அதன் இயல்பான வெம்மையால் வெதுப்பும் தன்மை அழிவுற்றதாகக் கூறினார். நடுவில் சிறிய துளையை உடைய வட்டிலை நீர்நிறைந்த பாத்திரத்தில் இட்டால், துளை வழியாக நீர் புகுந்து நிறைய, அவ்வட்டில் நீரில் அமிழ்வது ஒரு நாழிகை எனக் கணக்கிடுவர். ''பன்னிரண்டரைப் பலம் எடை உள்ள தாமிரத்தைக் கொண்டு மகத தேசத்தில் ஒரு படி அளவாகச் செய்யப்பட்டதும், இருபது குன்றி மணி எடையுள்ள தாமிரத்தைக் கொண்டு பொன்னினால் நாலங்குலம் அளவாகச் செய்த சலாகை கொள்ளும் அளவாக அடியில் துனளயிடப்பட்டதுமான ஒரு பாத்திரத்தைத் தண்ணீரில் இட, அப்பாத்திரம் எவ்வளவு நேரத்தில் தண்ணீரால் நிறையுமோ அவ்வளவு காலம் ஓர் நாழிகை என்று அறியப்படும்'' என்ற விஷ்ணுபுராணக் கருத்து இங்கு நோக்கத்தக்கது. 'குறுநீர்க் கன்னல் இனைத்தென்றிசைப்ப' (முல்லை - வரி58), குறுநீர்க் கன்னல் எண்ணுநர்' (அகம் - 43) 'குறு நீர்க் கன்னலின் யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்'' (மணி - 7 - 64 - 65), என்ற அடிகளில் நாழிகை வட்டிலால் பொழுதறிதல் குறிக்கப்படுதலைக் காணலாம். நாழிகையைக் கணக்கிட்டுக் கூறுவோர் கணக்கர் என்றும் கடிகையார் என்றும் கூறப்பெறுவர். பகல், இரவு வேறுபாடு அறிய முடியாத கூதிர்காலத்து இயல்பை 'மனையுறை புறவின் செங்கால் சேவல், இன்புறு பெடையொடு மன்று தேர்ந்துண்ணாது இரவும் பகலும் மயங்கிக்கையற்று'' (நெடுநல் - 45 - 47) என நக்கீரரும் புலப்படுத்தியமை காணலாம். மாது, ஓ அசைகள். 73 |